வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் மீட்சித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பொருளாதார முன்னேற்றத்திற்கான பயணம் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் மூன்று சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களும் இதற்கு நிகரான எதிர்வுகூறல்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது, நாட்டின் பணவீக்கம் 1.5% வரை வீழ்ச்சியடைந்துள்ளதோடு பல ஆண்டுகளாக பற்றாக்குறையில் இருந்த முதன்மைக் கணக்கின் இருப்பு, 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத உபரியாக மாற்ற முடிந்தது.
பல தசாப்தங்களுக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டில் கொடுப்பனவுகளின் நடப்புக் கணக்கு உபரியாக உள்ளது.
வட்டி விகிதம் 10% – 13% வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்று ஜனாதிபதி இன்று (09) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் சுட்டிக்காட்டினார்.