ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் – மஹிந்த இன்று பேச்சு

0
132

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசிடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் எதிர்வரும் 5ஆம் திகதி இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய பேச்சுகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றன. அந்தப் பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மறுபுறம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இந்தநிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here