Saturday, November 23, 2024

Latest Posts

மட்டக்களப்பில் பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டமே முன்னெடுப்பு – சாணக்கியன்

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டமே முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-

“எமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக ஆலயங்களின் புனரமைப்புக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகவும் குறைவான தொகையாகவே காணப்படுகின்றன.

இலங்கையில் இந்து காலாசாரத்துக்கென ஒரு அமைச்சு இல்லாத நிலைதான் காணப்படுகின்றது.

ஆனால், பௌத்த மதம் உள்ளிட்ட ஏனையவற்றுக்கு அமைச்சுக்கள் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்திலே சைவ சமய வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக உள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்களைக் கட்டியெழுப்புவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மிகவும் குறைவாகதாகவே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடமுனை, குடும்பிமலை போன்ற எல்லைப்புறக் கிராமங்களிலே விகாரைகள் அமைக்கும் பணிகள் மிகவும் ஆடம்பரமாக இடம்பெற்று வருகின்றன.

இதன்படி ஊத்துச் சேனை, வடமுனை, குடும்பிமலை ஆகிய பகுதியில் அமைந்துள்ள நெல்கல்மலை எனும் இடத்திலே இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அங்கு புதிய விகாரை ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இது தொடர்பில் சுமார் இரண்டு வருடங்களாக பிரதேச மட்டம், மற்றும் மாவட்ட மட்ட கூட்டங்களின்போது கேள்வி எழுப்பினேன். இந்நிலையில், ஒரு சிங்கள குடிமகன் வாழாத பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது என்று கேள்வி எழுகின்றது. ஆனாலும் கோடிக்கணக்கான செலவில் அங்கு விகாரை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.