Wednesday, November 27, 2024

Latest Posts

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது

போரின் போதும் அதன் பின்னரும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைக் கண்டறிவதற்காக சர்வதேசத்தின் ஆதரவைக் கோரும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்ட போராட்டம் 2,700 நாட்களைக் கடந்துள்ளது.

தமது உறவுகளுக்கு நீதி கோரி 2017 பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 2,700 நாட்களை நிறைவு செய்த நிலையில் 2024 ஜூலை 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடம் நீதி கோரும் போராட்டம் 2,700 நாட்களை எட்டியுள்ளது.” எனச் செயலாளர் எம். ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ்த் தாய்மார்களின் பிரச்சினை மாத்திரமல்ல, தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை எனத் தெரிவித்த எம். ராஜ் குமார், போராடினால்தான் தமிழ் மக்கள் வாழ முடியும் என மேலும் வலியுறுத்தினார்.

“காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தமிழ்த் தாய்மாரின் பிரச்சினை மாத்திரமல்ல, தமிழர்களின் வாழ்வுரிமை பிரச்சினை.  இது தேசிய இனப்பிரச்சினையின் துரும்பு.  இதனை நாம் சரியாக கையாள வேண்டும். இறையாண்மை ஒன்றே தேசியப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு. அதனை பெறுவதற்காகவே  தமிழ் மக்களின் அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். பொது வேட்பாளர் விடயத்திலும் இது கருத்தில்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்கள் போரடிானால் மாத்திரமே வாழலாம்.”

படையினரிடம் சரணடைந்த நிலையிலும், போரின் இறுதி நாட்களிலும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்னவென்பதை அரசாங்கத்திடம் கோரி, கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நாட்டின் வடக்கு, கிழக்கில் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அவர்களின் தலைவிதியைக் கண்டறியும் நோக்கில், மைத்திரி-ரணில் அரசாங்கத்தினால் கடந்த 2018 பெப்ரவரி 28ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் (OMP) ஒருவரைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கொக்குத்தொடுவாய் பாரிய மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (OMP) தற்போதைய தலைவர் மகேஷ் கட்டுலந்த, அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்களா என சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

“காணாமல் போனவர்களின் தலைவிதியை மிக உயர்ந்த தரத்திற்கு அமைய கண்டறிவதோடு, இது வரையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள காணாமல் போனவர்களுக்கும், கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய எதிர்பார்க்கின்றோம்.” என சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த பிரதேச ஊடகவியலாளர்களிடம் கடந்த 5ஆம் திகதி தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சடலங்கள் கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் புதைக்கப்பட்டதா? என்பதை அறிய தேவையான உயிரியல் தரவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் இருந்து பற்கள் அகற்றப்பட்டு அவை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள சடலங்களை பரிசோதிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“இது தொடர்பாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் இவ்வாறு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடுவார்கள் எனின், அவர்களின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, இந்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படும்.”

காணாமல் போனவர்களை அடையாளம் காண பல சத்திய கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு நீதவான் தெரிவித்துள்ளதாக, முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுப்பதில் தலைமை வகிக்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ கடந்த ஜூலை 10ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.