திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய தாலி திருட்டு விவகாரம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விசாரணையில் சற்று திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து முகநூலில் பல அனாமதேய பதிவுகளை காண முடிவதாக இரகசிய மற்றும் புலனாய்வு துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து விசேட தொழில்நுட்ப பிரிவு முகநூலில் அனாமதேய பதிவுகளை இடுபவர்கள் குறித்து தேடி வருகிறது.
இவ்வாறு முகநூலில் பதிவுகளை இடுபவர்கள் தாலி திருட்டு விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுகிறது.
விரைவில் அதிரடி கைதுகள் இடம்பெறலாம் என புலனாய்வு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை திருக்கோணேஸ்வர ஆலய புனரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா 10 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக சிலர் தகவல் பரப்பி வருகின்ற போதும் அவ்வாறு நிதி உதவி எதுவும் வழங்கப்படவில்லை என இந்திய தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலி திருட்டு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க பொலிஸார் முயற்சித்து வரும் தருணத்தில் அதனை திசை திருப்பும் வகையில் ஒரு கும்பல் செயற்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.