Thursday, September 19, 2024

Latest Posts

தமிழ்ப் பொது வேட்பாளரைத் தூக்கி வீசி விட்டு சஜித்துக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!

“தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்காமல் அதனைத் தூக்கி வீசி விட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மேடையேறி உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கமைய உத்தியோகபூர்வமாக முதன் முதலாக மேடையேறியுள்ளேன். கடந்த முதலாம் திகதி நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றோம்.நான் இதனைச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்த போதிலும்கூட எமது கட்சிக்குள்ளேயே பலவிதமான சலசலப்புக்கள் ஏற்பட்டிருப்பதனை நீங்கள் அறிவீர்கள். மிகச் சொற்ப அளவிலான எண்ணிக்கையானவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு மாயமானுக்கு மயங்கி அதனை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியான முயற்சியிலே எங்களுடைய கட்சி ஈடுபட்டது கிடையாது. அதிலே எங்களது எந்தப் பங்களிப்பும் கிடையாது.உதிரிகள் எல்லாம் சேர்ந்து பெரியதொரு திட்டத்தை வகுத்து இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முயற்சியை ஆரம்பித்தபோதே எங்கள் கட்சியின் மத்திய செயற்குழுவினர் 5 தடவைகள் கூடி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருக்கின்றோம்.

முதல் கூட்டத்திலேயே இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற அபாயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனச் சொன்னோம். இறுதியிலே “இலங்கைத் தமிழரசுக் கட்சியை எப்படியும் நாங்கள் வழிக்குக் கொண்டு வருவோம்” எனச் சொல்லிக்கொண்டிருந்தவர்கள் அது முடியாமல்போன காரணத்தினாலே எங்களுடைய கட்சியில் இருந்தே ஒருவரைப் பிரித்தெடுத்து அவரைத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்னும் நாமம் சூட்டி முன்னிறுத்தியிருக்கின்றார்கள்.அவருக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அவரிடத்தில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. எங்கள் கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கின்றோம். அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம். இவை பொதுவெளியிலே சொல்லப்பட வேண்டும்.எங்கள் கட்சியின் உத்தியோகபூர்வ முடிவை மலினப்படுத்தும் வகையில் பலர் இன்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பின்னர் தீர்மானிப்போம். ஆனால், நெருங்கி வந்திருக்கின்ற இந்த ஜனாதிபதித் தேர்தலிலே வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு மட்டும்தான் என்பதை உறுதியாகக் கட்சியின் சார்பிலே உத்தியோகபூர்வமாகப் பொது மேடையிலே அறிவிப்பதில் நான் பெருமைப்படுகின்றேன்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதோ, தமிழ்ப் பொது வேட்பாளர் என்கின்ற மாயமானுக்கு வாக்களிப்பதோ உங்களுடைய பொன்னான வாக்கை நீங்களே குழிதோண்டிப் புதைத்து வைக்கின்ற செயலாகவே இருக்கும். ஜனநாயகத்திலே ஒவ்வொரு வாக்களிக்கும் சந்தர்ப்பம் வருகின்றபோதுதான் பிரஜைக்குத் தான் அளிக்கின்ற புள்ளடி நாட்டிலே ஒரு மாற்றத்தை, தான் விரும்புகின்ற ஆட்சியாளனைக் கொண்டு வருகின்ற உரித்தை வழங்குகின்றது. இதை இல்லாமல் செய்யும் கோஷமே பகிஷ்கரிப்பு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் கோஷம்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.