கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது அவசியம். அதனால் மக்கள் தமது வாக்குகளை தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கிலும் தமக்கு உண்மையாக பணியாற்ற விரும்புபவர்களையும் அடையாம் கண்டு வாக்களிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இதில் கண்டி மாவட்ட அமைப்பாளர் விஷ்வா, மாவட்ட செயலாளர் குலேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பாரத் அருள்சாமி இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான எனது வெற்றிக்கு தனது முழு பங்களிப்பை வழங்குவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தமிழ் பிரதிநிதித்துவத்தை மீண்டும் கண்டி மாவட்டத்தில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். இளம் சிந்தனையோடு மற்றும் தூர நோக்குடன் கண்டி மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், எமது மக்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும், மக்களுடைய குரலாய் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் தமிழ் பிரதிநிதித்துவம் அவசியமாகும்.
அதனால் எனது வெற்றியை உறுதி செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன.கண்டி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சட்டவாக்க சபையில் எடுத்துரைத்து அவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய போதிலும், இறுதியில் தமது சுய இலாப அரசியலையே முன்னெடுத்தனர்.
இதனால், கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கான ஒரு குரலாக சட்டவாக்க சபையில் ஒலிப்பதற்கு எனக்கு பூரண ஆதரவை மக்கள் வழங்குவார்கள் என முழு நம்பிக்கையுடன் இந்தத் பொதுத் தேர்தலிலும் போட்டியிடுகின்றேன்.கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு இம்முறை பாரிய சவால் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.அதனால் நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களார்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.” என்றார்.