Sunday, November 24, 2024

Latest Posts

நேரடி, மறைமுகதேர்தல் பிரசாரம்முற்றாகத் தடை

“வாக்காளர்கள் நாளைமறுதினம் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இன்றும், நாளையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். தேர்தல் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. சகல வாக்களிப்பு மத்திய நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதியானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம்.

தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை (நேற்று) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன. வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது.

வாக்காளர்கள் சுயமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும்  முடிவுறுத்தப்படுகின்றன.  

வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய அடையாளம் இடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பின்போது வாக்காளரின் இடது கை சுண்டு விரலில் உரிய அடையாளம் இடப்பட்டது.

அத்துடன்  2024.10.26 ஆம் திகதி சனிக்கிழமைநடைபெற்ற  காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளம் இடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 38(3(ஆ) ஆம் பிரிவின் பிரகாரம், வாக்களிப்பின்போது வாக்காளிப்பதை அடையாளப்படுத்துவதை அடையாள.ம் இடுவதில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை ஆட்காட்டி விரல் மீது உரிய  அடையாளம் இடப்படும்.  வாக்காளருக்கு  இடது கை ஆட்காட்டி விரல் இல்லாதிருப்பின்  அவரது வலது கையில் உள்ள வேறேதேனுமொரு விரலில் உரிய அடையாளம் இடப்படும்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.