உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து சுக்கிலவிருத்தி சினை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள பால் மாடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2023 மற்றும் 2024 ஆகிய இரு ஆண்டுகளில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும், குறித்த பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடிப்பதில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளால் தேவையான பால் மாடுகளை விநியோகிப்பதற்கு இதுவரைக்கும் இயலாமல் போயுள்ளது.
அதனால் நேரடியாக இரண்டு அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களாகப் பொருத்தமான கறவை மாடுகளைக் கொள்வனவு செய்வதற்கான இயலுமை தொடர்பாக நாடுகள் சிலவற்றிலிருந்து தகவல்கள் கேட்டறியப்பட்டுள்ளதுடன், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் இடையீட்டின் கீழ் பாகிஸ்தான் வணிக அபிவிருத்தி அதிகாரசபையால்
சஹிவால் (Shahiwal) மற்றும் நிலிரவி (Niliravi) வகைகளைச் சார்ந்த ஏழு (07) சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை எமது நாட்டுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சுக்கிலவிருத்தி கிடாரி சினை மாடுகளை இறக்குமதி செய்து சுக்கிலங்களை விருத்தி செய்யும் வரைக்கும் சஹிவால் வகையைச் சார்ந்த 20,000 சுக்கில சினைகளை இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்திச் சபை மூலம், அரசுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்களாகக் கொள்வனவு செய்வது பொருத்தமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கிடையில் சஹிவால் இனத்தைச் சேர்ந்த ஐந்து (05) பால் மாடுகள் மற்றும் நிலிரவி 3 இனத்தைச் சேர்ந்த இரண்டு (02) இனையும் கொள்வனவு செய்வதற்கும், 20,000 சுக்கில சினைகளை இந்திய பால் அபிவிருத்திச் சபையின் அரசுகளுக்கிடையிலான கொள்வனவாகப் பெற்றுக் கொள்வதற்கும், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.