Tuesday, April 22, 2025

Latest Posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவவை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தில் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு துப்பாக்கிதாரி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தமை விசாரணைகளின் போது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதாள உலக உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். 

துப்பாக்கிதாரி, இந்தக் கொலை 15 மில்லியன் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் 200,000 ரூபாய் ஊதியமாக தனக்கு வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

நீதிமன்ற வளாகத்திற்குள் சம்பந்தப்பட்ட பெண் துப்பாக்கியை தன்னிடம் கொடுத்த பிறகு, அதை தனது இடுப்புப் பட்டையில் மறைத்து வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. 

அந்தப் பெண்ணை சிறிது காலமாகத் தெரியும் என்றும், அதனால் அவருடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, வாடகை வாகன செயலி மூலம் வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அருகில் இருந்து நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்குச் சென்றதாக சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் மேலும் ஒப்புக்கொண்டுள்ளார். 

தன்னை அழைத்துச் செல்ல கார் ஒன்று அவ்விடத்திற்கு வருவதாக கூறிய போதும் அவ்வாறு வாகனங்கள் எதுவும் வராததால் இவ்வாறு செய்ததாகக் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியுள்ளார். 

பின்னர் துப்பாக்கியைக் கொண்டு வந்த பெண்ணுடன் கடை ஒன்றுக்குச் சென்று ஆடைகளை வாங்கியதாக அவர் கூறினார். 

பின்னர் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து வாடகைக்கு எடுத்த வேனில் கல்பிட்டிக்கு பயணம் செய்து, இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாரானதாக அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டைகள் அனைத்தும் அவிஷ்க என்ற குற்றவாளியால் தயாரிக்கப்பட்டவை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். 

அதேபோல், கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலையை தானே செய்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கணேமுல்ல சஞ்சீவ நேற்று (20) காலை புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவருக்கு எதிரான மூன்று வழக்குகளில் ஆஜராவதற்காக பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டார். 

சிறப்புப் பிரிவு குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் வழக்கு, புதுக்கடை, நீதிமன்றம் இலக்கம் 5 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அங்கிருந்த மீதமுள்ளவர்கள் அகற்றப்பட்டு கதவுகள் மூடப்பட்டன. 

இதற்கிடையில், சட்டத்தரணி போல் வேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி விசாரணைக் கூண்டில் இருந்த கணேமுல்ல சஞ்சீவவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு, துப்பாக்கியை அவ்விடத்தில் விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்கு வந்த, குறித்த கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளிடம், “உள்ளே துப்பாக்கிச் சூடு நடக்கிறது” என்று கூறிவிட்டு துப்பாக்கிதாரி ஓடியுள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புத்தளம் மற்றும் கோனஹேன முகாம்களின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​புத்தளம் நோக்கி வேனில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். 

வெள்ளை வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, ​​சிசிடிவி காட்சிகளில் இருந்த தோற்றமுடைய ஒருவரை புலனாய்வாளர்கள் விசாரித்த நிலையில், அவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பது தெரியவந்தது. 

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, மஹரகம, தம்பஹேன வீதியில் வசிக்கும் 27 வயதுடைய சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

அவரது பயணப் பொதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

இதன்போது, கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அழைத்துச் சென்ற வேன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

பின்னர், துப்பாக்கிதாரி அணிந்திருந்த சட்டத்தரணி ஆடை குறித்து விசாரித்தபோது, ​​குறித்த ஆடைகள் அடங்கிய பையை கொச்சிக்கடை-ரிதீவெல்ல வீதியில் விட்டுச் சென்றதாகக் தெரிவித்துள்ளார். 

அதன்படி, அவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.