பாதுகாப்பு காரணங்களுக்காக வடக்கு, கிழக்கில் அரசாங்கம் கையகப்படுத்திய அனைத்து காணிகளையும் மிக விரைவில் விடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்
காணிகளை விடுவித்து மக்கள் விவசாயம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தாம் சிங்கள மக்களுடன் அதிகளவில் நெருங்கிப்பழகுகின்ற போதிலும் அவர்கள் மத்தியில் அதிகளவில் பொதுக் கூட்டங்களை நடத்திய போதிலும் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை கடுகளவேனும் சீர்குலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.
எனவே, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையை பலப்படுத்தும் செயற்பாடுகளையே எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தமது அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தமக்கு வாக்ககளிக்காத மக்களிடமிருந்தும் தம்மீது நம்பிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.