தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தலுக்கு முன் கூறிய அனைத்தையும் புறக்கணித்து, தற்போதைய நிலையில் அரசு திட்டமிட்ட முறையில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சமகி ஜன பலவேக (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
“கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதை அரசு தொடர்ந்து தாமதித்து வருகிறது. இந்த அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன் அரசுச் சேவை பற்றி, கணக்காய்வு பற்றி, வெளிப்படைத்தன்மை பற்றி பேசிய அனைத்தையும் இன்று ஜனாதிபதி மறந்துவிட்டார். கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதை அரசு உத்தியோகபூர்வமாகத் தவிர்த்து வருவதாக இப்போது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது.
ஏனெனில் 2025 முதல் இந்த அரசின் அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் கணக்காய்வுக்கு உட்பட வேண்டிய நிலை உள்ளது. அதனால், தங்களுக்குப் பிடித்த ஒருவரை கொண்டு வந்து கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசு முயற்சிப்பது எங்களுக்கு தெளிவாகப் புலப்படுகிறது. ஜனாதிபதி முன்மொழிந்த அனைத்து நபர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்கள் தகுதி இல்லாதவர்கள் அல்ல; ஆனால் இந்தத் துறையை நன்கு அறிந்த, தேவையான அனுபவம் கொண்டவர்களை ஜனாதிபதி முன்மொழியவில்லை.
ஆனால் கணக்காய்வாளர் அலுவலகத்திலேயே 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும் திறனும் கொண்ட அதிகாரிகள் இருக்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும், அந்தப் பெயர்கள் முன்மொழியப்படவில்லை. அதற்கு பதிலாக, வெளியிலிருந்து அரசுக்கு நெருக்கமானவர்களின் பெயர்களை முன்வைத்து, கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பதை திட்டமிட்டு தாமதிப்பதன் மூலம் அரசின் கணக்காய்வு செயல்முறையில் பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது.
தற்போது கோப் (COPE) குழுவும் கூடவில்லை, கோபா (COPA) குழுவும் கூடவில்லை. இவ்வாறு பல நெருக்கடிகள் உருவாகியுள்ளன. இன்றைய நிலையில் அரசுச் சேவையை அரசியலாக்குவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது எங்களுக்கு தெளிவாகப் புலப்படுகிறது.”
முஜிபர் ரஹ்மான் இந்த கருத்துகளை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
