ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளசியை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கை வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்தபிறகு இத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது .
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அமைச்சராக கடமையாற்றிய போது, இராஜாங்க அமைச்சர் பௌசி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சொந்தமான லேண்ட் க்ரூஸர் ஜீப்பை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1.07 மில்லியன் ரூபா சட்டவிரோதமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பௌசி மீது குற்றம் சுமத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் எழுத்துமூல அனுமதியுடன் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான உரிமையை தமக்கு ஒதுக்கி இந்த வழக்கை வாபஸ் பெற தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.