வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு குறைந்தது 10 ஆண்டுகள் தேவை

0
22

– பிரதி அமைச்சர் டி.பி. சரத்

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளீர்களா என சிலர் கேள்வி எழுப்புவதாகவும், அனைத்து வாக்குறுதிகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது எனவும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“‘டிட்வா’ சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அது தீவிரமடைந்து வருவதாகவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்திற்கொண்டு நாம் விவசாயப் பருவத்தை முன்கூட்டியே ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

டிட்வா சூறாவளி எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அடுத்த இரண்டு மாதங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி நீரைச் சேமிப்பதே எமது நோக்கமாகும். அதன் பின்னர், சிறுபோக விவசாயப் பருவத்தை மார்ச் மாத ஆரம்பத்தில் தொடங்கி, மே மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் தேவைகளை இவ்வாறு முழுமையாக நிறைவேற்றும் அரசாங்கம் குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்து ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்குள் ‘இதனைச் செய்யவில்லை, அதனைச் செய்யவில்லை’ எனக் கேள்வி எழுப்புகின்றனர். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்துவிட முடியாது. தற்போதுள்ள அதிகாரிகளைக் கொண்டும் இந்தப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும், பல திட்டங்களை நாம் திட்டமிட்டு வருகின்றோம். அவற்றை ஏன் இப்போது வெளியிடுவதில்லை தெரியுமா? வெளியிட்டால், அடுத்ததாக ‘அதைச் செய்தீர்களா, இதைச் செய்தீர்களா?’ எனக் கேள்வி எழுப்புவீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் நேற்று (15) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் டி.பி. சரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், டிட்வா சூறாவளி மற்றும் எல் நினோ நிலைமை தொடர்பான விடயங்களை அவர் குழப்பியுள்ளதாகத் தெரிகிறது. டிட்வா சூறாவளி 2025 நவம்பர் மாதத்தில் ஏற்பட்டது. 2027ஆம் ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகளில் நீர் முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது எல் நினோ நிலைமையைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here