Wednesday, October 16, 2024

Latest Posts

குவேனியின் சாபம் சிறிலங்கா ஆட்சியாளர்களைத் துரத்துகிறது!

 நக்கீரன்

எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்குமோ என்ற ஐயம்  எழுகிறது.

“ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணைவான எதிர்வினை உண்டு”  என்பது அறிவியலாளர் நியூட்டன் அவர்களது மூன்றாவது விதி. எடுத்துக்காட்டாக இருவர் பனியின் மீது ஸ்கேட் (சறுக்குக் கத்திக் காலணி) அணிந்து ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு அசையாது நிற்கும் காட்சி. ஒருவர் உந்தித் தள்ளும் விசைக்கு ஏற்ப மற்றவரும் சரிசமமாக எதிர் விசை தருவார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் “அரசியலில் பிழை செய்தால், அறமே கூற்றுவனாய் நின்று தண்டிக்கும்; புகழ்மிக்க பத்தினியை மனிதரே அன்றி முனிவரும் தேவரும் போற்றுதல் இயல்பு. முன்செய்த தீவினை சினந்து வந்து பயனைத் தோற்றுவிக்கும்” எனக் கூறுகிறது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம். 
 (பதிகம் 6) 

இந்த மூன்று செய்திகளை முன்னிறுத்தியே இளங்கோ அடிகள் காப்பியம் படைத்துள்ளார். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பது பழமொழி. காலையில் கேடு செய்தால் மாலையில் துன்பம் வரும் என்பது நேரிடையான பொருள்.  செயலுக்குத் தானாகவே  விளைவு  வரும். அது உடனடியாகவும் இருக்கலாம் அல்லது பல ஆண்டுகள் கழித்தும் வரலாம்.

இலங்கையின் வரலாறு விஜயனும் அவனோடு வந்த அவனது 700 தோழர்களோடுதான் தொடங்குகிறது. அவனைப் பற்றிய கதை எல்லோருக்கும் தெரியும். வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்டை ஆண்டவன் சிங்கபாகு. இவன் ஒரு சிங்கத்துக்கும் வங்கநாட்டு இளவரசிக்கும் பிறந்தவன். இவன் தனது உடன்பிறப்பான சிங்கவல்லியைத் திருமணம் செய்து கொள்கிறான். இவர்களுக்கு 16 இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன.  அவர்களில் மூத்தவன் விஜயன் ஆவான். அவன் முரட்டுக் குணம் படைத்தவன். குடிமக்கள் அவனைப் பற்றி அரசனிடம் முறையிட அரசன் அவனுக்கும் அவனது தோழர்களுக்கும் மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி நாடுகடத்தி விடுகிறான். அந்தக் கப்பல் இலங்கையின் வடமேற்குக் கரையை  கிமு 543 இல்  வந்து சேருகிறது.

விஜயன் கப்பலை விட்டு இறங்கி, இலங்கைத் தீவில் காலடி வைக்கிறான். அங்கு ஒரு மரத்தடியில் குவேனி  அமர்ந்திருக்கிறாள். இவள் இயக்கர் அல்லது இராட்சதர் குலத்தைச் சேர்ந்தவள்.  இலங்கையை ஆண்ட இராவணன் இராட்சதன் என்று கூறப்பட்டதுபோல, மகாவம்சம் குவேனியையும் இராட்சத குலம் என்று வர்ணிக்கிறது,  பண்டைய காலத்தில் இனங்கள் இருக்கவில்லை. குடி, குலங்கள் இருந்தன. குடிகள் பெருகி குலங்கள் ஆகின. குலங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டன.   நாகர், இயக்கர், இராட்சதர், இடும்பர், பூதர், அசுரர், அவுணர், கருடர், வேடர், கந்தருவர், வானரர் என அழைக்கப்பட்டார்கள்.

குவேனியை விஜயன் சந்தித்து அடைக்கலம் கோருகிறான். அவள் அடைக்கலம் அளிக்கிறாள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறக்கிறார்கள்.

விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் பல நகரங்களையும், கிராமங்களையும் உருவாக்குகிறார்கள். அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய இராச்சியத்துக்கு மன்னனாகும்படி, விஜயனை கேட்டுக் கொள்கிறார்கள். ஆனால், விஜயன் மறுத்து விடுகிறான்.

“இராச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளவரசியை நான் மணந்தால்தான், அரியணை ஏறமுடியும்” என்று கூறுகிறான். இதன் காரணமாக, விஜயனின் தோழர்கள் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரைக்குச்  செல்கிறார்கள். மதுரையை ஆண்ட மன்னனுக்கு முத்துக்கள், தங்க நகைகள்  முதலியவற்றை பரிசாக வழங்கி, தங்கள் மன்னனான விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதற்கு பாண்டிய மன்னன் சம்மதிக்கிறான்.  பாண்டிய இளவரசியுடன், விஜயனின் 700 தோழர்களுக்கும் 700 பெண்களை தேர்வு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைக்கிறான். பாண்டிய இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்.

விஜயன் என்பவனுக்கு பாண்டிய மன்னன் ஒருவன்  பெண் கொடுத்தான் என்ற செய்தி  பாண்டியர்களது  வரலாற்றில் குறிப்பிடப்படவில்லை. எனவே இது கட்டுக்கதையாக இருக்க வேண்டும்.  

விஜயன், குவேனியை விளித்து “நான் பாண்டிய இராசகுமாரியை மணக்கப்போகிறேன். என்னுடைய இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, இங்கிருந்து போய்விடு” என்று கூறுகிறான். இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு “லங்காபுரா” என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். அவளை அவளது குலத்தவர்கள் கொன்றுவிடுகிறார்கள்.

இந்தக் கதை இன்றைய சிங்கள இனத்தவர்களுக்கு துளியளவும் பெருமை சேர்ப்பதாக இல்லை. எனவே சிங்கத்துக்கு பிறந்த பிள்ளைகள், நாட்டில் இருந்து துரத்தப்பட்ட விஜயன் கதையை இன்று மறக்க அல்லது மறுக்க விரும்புகிறார்கள்.

விஜயன் வருகை:

 இலங்கை அரசு 1956 ஆம் ஆண்டு  “விஜயனின் வருகை” எனக் குறிப்பிட்டு  ஒரு 10 சத சிறப்பு முத்திரையை வெளியிட்டது. அது  விஜயனும் அவனது 700 தோழர்களும் கிமு 543 இல் தோணிகளில் வந்து 2,500 ஆண்டுகள் நிறைவாகியதைக் கொண்டாடு முகமாக வெளியிடப்ப ட்டது. அதில் விஜயனும் அவனது தோழர்களும்  இலங்கைக் கரையை வந்தடைந்த போது அங்கு இயக்கர் குல அரசியான குவேனி  ஒரு மரத்தின் கீழ் இருந்து கொண்டு நூல் நூற்றுக் கொண்டிப்பது போன்ற சித்திரம் வரையப்பட்டிருந்தது. இது விஜயன் வந்தேறி என்பதை எண்பிப்பதுபோல இருந்து விட்டது. சிங்கள – பவுத்த தீவிரவாதிகளின் கடுமையான எதிர்ப்பை அடுத்து அந்த முத்திரை அவசர அவசரமாகத்  திரும்பப் பெறப்பட்டது.

எனவே இன்று சிங்களவர்கள் தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, விஜயன் இலங்கையில் காலடி எடுத்து வைத்த பின்னரே சிங்கள இனத்தின் வரலாறு தொடங்கவில்லை என வரலாற்றைத் திரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத்  தள்ளப்பட்டுள்ளார்கள்.

இப்போது  தாங்கள் விஜயன் வருகைக்கும் முற்பட்ட பூர்வீக குடிகள் என்பதை எண்பிக்க இலங்கை வேந்தன் இராவணனை தோளில் சுமக்க முற்பட்டுளார்கள்.

இந்தப் புதுக்  கோட்பாட்டை விலைப்படுத்த பல அமைப்புக்கள் தென்னிலங்கையில் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றில்   இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் அவர்களது  இராவண பலய ஒன்றாகும். இராவண சேனை, சிங்கள பலய என்ற பெயர்களிலும்  அமைப்புகள்  இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பவுத்த தேரர்களே தலைமை தாங்குகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால்  இலங்கை  அரசு  சிங்களவர்கள் இராவணனின் சந்ததியினர் என்பதை எண்பிக்க பல  முயற்சிகளை மேற்கொண்டு

 வருகின்றது. அரசியல் மாற்றம்:

குவேனிய, விஜயன் ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த குவேனி சாபம் இடுகிறாள். இலங்கையில் சிங்கள சந்ததிகள் யாராலும் நிலையான அரியணையில் அமர முடியாது என்று சாபம் விடுகிறாள். இலங்கை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு குவேனியின் சாபம் இன்றுவரை பலித்து வருவது தெரிய வரும்.

மகா வம்சத்தின் (கிமு 543 கிபி 275) சிங்கள அரசர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பலவீனமானவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருந்ததை மகாவம்சத்திலிருந்தே காணலாம். இந்த வம்சத்தின் 54 மன்னர்களில், 15 பேர் ஓர் ஆண்டிற்கும் குறைவாகவும், 30 பேர் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாகவும், 11 பேர் அரியணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர், 13 பேர் போரில் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் அவர்களின் வாரிசுகளால் கொல்லப்பட்டனர். தொடக்ககால சிங்கள அரசர்களின் இருண்ட அவலமான பதிவு அரியணைக்கான இடைவிடாத போராட்டம், சகோதரக் கொலைகள், சதிகள் மற்றும் உள் சண்டைகள் ஆகியன இடம் பெற்றன.

இன்று  73 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் இலங்கைத் தீவு  வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாது ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்சிக் கட்டிலில் இருக்கும் இராசபக்சா வம்சம் எப்போது கப்பல் கவிழும் என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

நெருக்கடிகள் ஒன்றா இரண்டா? அவை வரிசையாக எழுந்து நிற்கின்றன. எல்லா நெருக்கடிகளுக்குள்ளும் தலையாய நெருக்கடி வெளிநாட்டு  நாணய கையிருப்பு ஆகும்.   2019 ஆம் ஆண்டுக் கடைசியில்  அ.டொலர் 7.5 பில்லியன் ஆக இருந்த வெளிநாட்டு  நாணய கையிருப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர்  அ.டொலர் 1.3 பில்லியன் ஆகக் குறைந்திருந்தது.  ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று அ.டொலர்  3.1 பில்லியன் ஆக அதிகரித்துவிட்டதாக சொல்கிறார். ஆனால் எப்படி, யாரிடமிருந்து அந்த நிதி கிடைத்தது என்பதை ஆளுநர் சொல்லவில்லை. சீனா   10 பில்லியன் யுவானைக் நாணய மாற்று முறையில் கொடுக்கும் என்ற செய்திதான் வந்திருந்தது. எது எப்படியிருப்பினும் கடன்தான் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்தான்  நாணய இருப்பாகக் காட்டப்படுகிறது.

ஆனால் இந்த நாணய இருப்பு யானைப் பசிக்கு சோழப் பொரி போட்ட கதையாகத்தான் இருக்கும். காரணம் இலங்கையின் மொத்த வெளிநாட்டு நாணயக் கடன் அ. டொலர் 35.1 பில்லியன் ஆகும். இதில்  அடுத்த ஆண்டு அ.டொலர் 4.5  பில்லியன்  கடனைக் கட்ட வேண்டும்.    அடுத்த ஆண்டு அ.டொலர் 4.2 பில்லியன் கட்ட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு தொடக்கம் கடன் கொடுப்பனவு அதிகரித்தவண்ணம் உள்ளது. கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42.6 விழுக்காடாகும். இது போன்ற காரணங்களால் வெளிநாட்டு வெளிநாட்டு கடன் முகமைகள் இலங்கையின் கடன்வாங்கும்  தகுதியை குறைத்துள்ளன.

வட்டி வீதம் மற்றும் அந்நிய செலாவணி தொகை என்பனவற்றை கட்டுப்படுத்துவதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி பணிப்பாளர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் நிதித் தட்டுப்பாடு,  உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம், கோவிட்,  விலைவாசி ஏற்றம் போன்ற நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் எதிர் நோக்குகிறது. மக்கள் பால் மா, சமயல் எரிவாயு, அரிசி, சீனிக்கு கியூவில் கால் கடுக்க நிற்கிறார்கள். மரக்கறி உட்பட  பொருட்களை கிலோ கணக்கில் இல்லாது 250 கிராம் கணக்கில் வாங்குகிறார்கள். பேருந்துப் பயணத்துக்கு  குறைந்த கட்டணம் ரூபா 17 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் 825 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய நாள்  மட்டும் மத்திய வங்கி 202 பில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது.

இதேவேளை, 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான பிணைமுறிகளையும் அரசாங்கம் நேற்று வெளியிட்டிருந்தது. இதில் 33.5 பில்லியன் ரூபா விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில்  300 அரிசி கொள்கலன்கள்  உட்பட சுமார் 1,000 தேங்கிக்கிடப்பதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குவேனியின் சாபம் ஒன்றல்ல ஒன்பது என்கிறார்கள். அவை சிறிலங்கா ஆட்சியாளர்களைத் துரத்துகிறது!

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.