வெளிநாடு சென்ற போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பொறுப்பையும் கொண்டு சென்றுவிட்டார் என
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை குற்றம் சாட்டுகின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையானது வட மாகாணத்தின் தலையாயதும் பிரதானதுமான வைத்தியசாலை என்பதுடன் வட மாகாணத்திலிருந்து வைத்தியர்களை உருவாக்கும் போதனா வைத்தியசாலையும் ஆகும். அந்த வகையில் அதன் நிர்வாகம் என்பது எப்பொழுதும் சீரியதாகவும் பொறுப்புத்தன்மை வாய்ந்ததாக அமைவது முக்கியம். ஆயினும் அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களது நடவடிக்கை எமக்கு அசூயை அளிப்பதாக உள்ளது. தனது மேற்படிப்புக்காக ஐக்கிய இராச்சியம் செல்வதற்கு முன்னர் தனது பணிகளை பதில் பணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்க வேண்டும். அல்லது யார் பதில் பணிப்பாளராக கடமையேற்பது என்பது தொடர்பில் சுகாதாரப்பணிப்பாளர் ஊடாக வைத்தியசாலைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.
முதல் முறை வெளிநாடு சென்றபோது தனது கடமைகளை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சிறீபவானந்தராஜாவிடம. ஒப்படைத்து சென்றிருந்தார். மருத்துவர் சிறீபவானந்தராஜாவும் பணிப்பாளர் பதவியில் மிக திறம்பட பணியாற்றி கோவிட் மிக தீவிரமாக இருந்த காலப்பகுதியில் வைத்தியசாலை நிர்வாகத்தை செவ்வனே வழி நடத்தியிருந்தார். ஆயினும் இம்முறை வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி எவ்வித பொறுப்பும் இன்றி முறையாக எந்த பொறுப்பு ஒப்படைப்பும் இன்றி வெளிநாடு புறப்பட்டு சென்றிருக்கிறார். அத்துடன் அங்கிருந்து வைத்திய நிபுணர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தான் வெளி நாடு வந்து விட்டால் கூட அங்கிருந்து வைத்தியசாலை நிர்வாகத்தை மேற்கொள்வதாகவும், விண்ணப்பங்கள் கோரல்கள் என்பவற்றை தன்னை தொடர்பு கொண்டு செயற்படுமாறும் கூறியிருக்கின்றார்.
இவரது இச் செயற்பாடானது இலங்கையின் தாபன விதிக்கோட்பாடுகளை மீறுவதாகவும், மருத்துவப் பட்டப்பின் படிப்புக் கல்லூரியின் நியதிகளை மீறுவதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் வெளி நாட்டிலிருந்து தான் வைத்தியசாலையை இயக்க்கப்போவது எனக் கூறியிருப்பது அதிகாரத்தின் மீது இவருக்கு உள்ள அதீத பேராசையைக் காட்டுவதுடன் சட்ட விதிகளை மீறி தனது அதிகார ஆக்கிரமிப்பை செய்ய விழையும், பிறரை உரிய பணிகளை செய்ய விடாது குழப்பும் இவரது ஏகபோக மன நிலையை சுட்டுவதாக அமைகிறது.
இந்த குழப்ப நிலையை பயன்படுத்தி குட்டையில் மீன்பிடிப்பதாக அமைந்துள்ளது, பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் ஜமுனானந்தா அவர்களது அத்துமீறல்கள். அவரது தலையீடுகளால் வைத்தியசாலையின் வழமையான நடவடிக்கைகள் பாதியளவு குழப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் அவரது குழப்ப நிர்வாகத்தின் உச்சக்கட்டமாக யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவானது முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ச்சியாக வைத்தியர் பற்றாக்குறை நிலவும் நிலையிலும் அப் பிரிவின் வைத்தியர்கள் திறம்பட தமது சேவையை வழங்கி வந்துள்ளனர். ஆயினும் அவர்கள் தமது சேவையை தொடர்வதற்கு வைத்தியர்களை தந்து உதவுமாறு நிர்வாகத்தையும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்க யாழ் கிளையையும் பல முறை கடிதங்கள் மூலம் வேண்டியிருந்த நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பகீரதப் பிரயத்தனத்தின் பயனாக அவர்களுக்கு உள்ளகப் பயிற்சியை முடித்த வைத்தியர்களில் நால்வரை தருவதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி உறுதியளித்து விட்டு அதனை நிறைவேற்றாது காலம் கடத்திவிட்டு வெளி நாடு சென்று விட்டார் என்றுள்ளது.