பொதுமக்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புணர்வுடன் சேவையாற்ற வேண்டும் – சத்தியசீலன் தெரிவிப்பு

0
77

பொதுமக்களுக்கு அரச சேவை மீதுள்ள நம்பிக்கையீனத்தை மாற்ற வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரினதும் பொறுப்பாகும் என்று  பருத்தித்துறை பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது. முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற ‘தூய்மையான இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நேரலை ஊடக இணைந்திருந்தனர்.

அந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  மத்தியில் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர்,

“பொதுமக்கள் அனைவருக்கும் இலகுவான மக்கள் சேவையை அரச உத்தியோகத்தர்களாகிய நாம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது அரச சேவைக்குரிய நியமத்துடன் சேவையை நாம் நிகழ்த்திச் செல்ல வேண்டும்.

நாங்கள் இந்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள், கடமைகளைச் சிறப்பான முறையில் ஆரம்பித்து பொதுமக்களுக்கான சேவையை கிராம மட்டத்திலும், பிரதேச செயலக மட்டத்திலும் சிறப்பான முறையில் வழங்க வேண்டும்.

கடந்த வருடம் எங்களுக்குப் கிடைக்கப் பெற்ற பெருமளவான நிதியைச் சிறப்பான முறையில் பயன்படுத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளோம்.

பொதுமக்களுக்கு அரச சேவை தொடர்பில் புரிந்துணர்வு அல்லது நம்பிக்கைத் தன்மை இல்லை. அதனை மாற்ற வேண்டியது அரச அதிகாரிகளின் அல்லது அரச சேவையாளனின் பொறுப்பாகும்.

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் அந்த வளர்ச்சிக்குரிய முக்கிய முதுகெலும்பாக அரச துறையினர்தான் பங்களிப்பு செய்துள்ளார்கள். எனவே, எங்களுடைய நாட்டின் அபிவிருத்தியில் இந்த அரச துறையின் பங்களிப்பு மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த எதிர்பார்பை இந்த வருடத்திலே நாங்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

இங்கு மாகாண மற்றும் மத்திய அமைச்சுக்களின் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்றீர்கள். எனவே, உங்களுக்குத் தரப்பட்ட வேலைகளைச்  சரியான முறையில் செய்து முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்யும்போதுதான் அது பிரதேசம், மாவட்டம், மாகாணம், தேசிய ரீதியிலே அதன் பெறுபேற்றைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் பெறுமதி மிக்க அரச ஊழியர்கள்.  

அரச இயந்திரத்தை இயக்குபவர்கள் நீங்கள்தான். எனவே. நீங்கள் சிறப்பான முறையில் அரசின் கொள்கைகள், சட்டங்கள், செயற்றிட்டங்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here