டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஜனாதிபதி விசேட பணிப்புரை!

0
189

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு மற்றும் அது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திடடங்களின் முன்னேற்றம் தொடர்பிலான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டலை பின்பற்றி முப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு தொற்று அதிகமாக காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டெங்கு ஒழிப்பு மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு தொடர்பிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் காரணமாக டெங்கு பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், பாடசாலை, வழிப்பாட்டுத் தலங்கள், பொது இடங்கள், தனியார் நிறுவனங்களை அண்டிய பகுதிகளில் அதிகளவில் டெங்கு பரவல் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

மேலும், டெங்கு ஒழிப்புக்காக சுகாதார அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் பிரிவொன்றை நிறுவவும், அதற்கு உரிய அதிகாரிகளை நியமிக்கவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தலைமையில் முப்படை பிரதானிகள் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபரின் பங்கேற்புடன் இன்று விசேட சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனூடாக நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் அதன் நாளாந்த முன்னேற்றம், எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அறிவிப்பதற்கான முறைமை தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here