Saturday, December 21, 2024

Latest Posts

எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ள இ.தொ.கா. தயார்

“இவ்வருடம் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது.” – என அதன் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நெருக்கடி நிலைமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு கடந்த வருடம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2022 காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது இல்லை. நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய வீடமைப்பு திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றோம். காணி உரிமையும் பேசுபொருளாக இருந்தது. அதனை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்திய அரசின் 3 ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் வழங்குவோம். இது பற்றி மக்களுக்கு விரைவில் தெளிவுப்படுத்தப்படும்.

மலையக மக்களை கௌரவப்படுத்தும் விதத்தில் இந்தியா அரசின் ஏற்பாட்டில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக சிறார் போசாக்கு, இலவச உணவு திட்டம் என பல திட்டங்களை அமைச்சின் ஊடாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

நாம் 200 நிகழ்வை வெற்றிகரமாக நடத்தினோம். இந்நிகழ்வில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அம்மையார் பங்கேற்றிருந்தனர். அவருக்கு நன்றிகள். இந்நிகழ்வு மூலம் எமது மக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வீதி அபிவிருத்தி உட்பட பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 2023ஐ விட 2024 சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் உணவு பணவீக்கம் குறைவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி நேர் பெறுமதியில் உள்ளது.

மக்கள் மீது விரும்பி வரி விதிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும். மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படாதிருக்க வேண்டுமென்றால் வரி அதிகரிப்பு கட்டாயம் அவசியம். உலக நிலைவரமும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டதால்தான் பணவீக்கத்தை குறைக்க முடிந்தது. இன்னும் 3, 4 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நம்புகின்றோம்.

நீர்க் கட்டணம் தொடர்பான விலை சூத்திரம் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அந்த சூத்திரம் அமையும். இவ்வருடம் கட்டாயம் தேர்தல் நடக்கும். ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அல்லது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.