காணாமல் போனோர் தொடர்பிலான பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு உத்தரவு

0
59

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு கானாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1788 ஆகும். இது தொடர்பான 1289 முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

எஞ்சிய 500 முறைப்பாடுகளை உடனடியாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, காணாமல் போனோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடுத்த ஆறு மாதங்களுக்குள் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

மீள்குடியேற்றம், கல்வி, சுகாதாரம், காணி, கடற்றொழில், விவசாயம் மற்றும் வனப் பாதுகாப்பு மற்றும் வடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆகிய துறைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண அபிவிருத்திக்கு தேவையான திட்டத்தை தயாரித்து வடக்கை துரித அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புதிய பொருளாதார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் எவருக்கும் இலங்கைக்கு வந்து பிரேரணையை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில் உள்ள ஆற்றலைப் பாதுகாப்பதன் மூலம் நாட்டை எரிசக்தி ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்காக பூநகரி ஆற்றல் மையமாக கட்டியெழுப்பப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

வடக்கின் விவசாயத்தை நவீனமயப்படுத்தி நாட்டிலேயே வடமாகாணத்தை விவசாய மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடமாகாணத்தில் காணி விடுவிப்பு துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற ஜனாதிபதி, பலாலி விமான நிலையம் மற்றும் பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான காணிகளின் அளவு குறித்து இந்த பெப்ரவரி மாதத்திற்குள் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கின் காணி பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் வந்து காணி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கின் நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இரண்டு நீர்த் திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நீர் திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தற்போது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here