பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மைக்காலமாக அந்த கட்சியில் இருந்து பதவி விலகி வருகின்றனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் சுப்ரமணியம் முதலில் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் விஜேகுமார் கட்சியின் பதவிகளில் இருந்து வௌியேறுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் காலிதாஸ் பதவி விலகியுள்ளார். கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக இவர் அறிவித்துள்ளார்.
பதவி விலகிய மூவரும் அரசியல் ரீதியில் சுயாதீனமாக முடிவெடுத்து செயற்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்தனி வட்டாரங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் என்பதால் இவர்களின் விலகல் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு இழப்பாக அமையும் என கருதப்படுகிறது.
மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தலைமையிலான மலையக அரசியல் அரங்கத்தில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கட்சி தலைமையின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக மேலும் சில உறுப்பினர்கள் விரைவில் தங்களது பதவி விலகலை அறிவிக்கவுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
அதில் மஸ்கெலியா, கொட்டக்கலை, வலப்பனை, நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அடங்குவதாக அவர் கூறினார்.
