இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து பரந்த வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்துவதற்கு உதவும் வகையில் புதிய வெளிநாட்டுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பத்து இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின் போது, இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து, பல நாடுகளுடன் பரந்த உறவுகளை ஏற்படுத்தக்கூடிய நல்ல வெளிநாட்டுச் சேவையின் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இராஜதந்திரிகள் நேற்று தமது பணிகளுக்காக புறப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து மரியாதை செலுத்தினர்.
அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட இராஜதந்திரிகள் அந்தந்த நாடுகளுக்குள் தொடர்புகளை உருவாக்குவதும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் மிக முக்கியமான நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புலம்பெயர் சமூகத்தினருக்கு ஏற்படக்கூடிய அரசியல் பிரச்சினைகளை கையாள்வதற்காக இலங்கை புலம்பெயர் அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும், தற்போதுள்ள வர்த்தகத் திணைக்களத்திற்குப் பதிலாக ஒரு சர்வதேச வர்த்தக அலுவலகமும் நிறுவப்படும், அதேவேளை வெளிவிவகார அமைச்சு 2030 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு சேவையின் வரைவை உருவாக்கி வருகிறது, இது அனைவராலும் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
N.S