Monday, January 20, 2025

Latest Posts

ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு

  • மாலைமலர் ;

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகுகள் மீது திடீரென்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு மீன்பிடி படகில் வீல்ஹவுசின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் ராமேசுவரம் மீனவர்கள் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் தப்பினார்கள்.

இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து விட்டு நேற்று குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் ராமேசுவரத்தை சேர்ந்த ஏராளமான விசைப்படகுகள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடி விசைப்படைகளை விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று மீனவர்களது வாட்ஸ்-அப் குரூப்களில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

இந்த வீடியோ பதிவை வைத்து உளவு பிரிவு போலீசார் இது நேற்று நடந்த தாக்குதல் சம்பவமா? அல்லது ஏற்கனவே மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய பழைய தாக்குதல் சம்பவத்தின் வீடியோவா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.