ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், அனைத்து அமைச்சுகளுக்கும் 2023 வரவு – செலவுத் திட்டத்தின் பிரேரணைகளின் கீழ் ஒதுக்கப்பட்ட மதிப்பிடப்பட்ட செலவினங்களில் 5% குறைக்கப்படும்.
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
திறைசேரி தற்போது நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என்று கூறிய பந்துல குணவர்தன, 2023 இன் முதல் சில மாதங்களுக்குள் வரி மூலம் ஈட்டக்கூடிய வருமானம் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரதூரமான பொருளாதார நெருக்கடி காரணமாக வெகுவாகக் குறைந்துள்ளது என்று விளக்கினார்.
இதனால், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் போன்ற ஏனைய நலன்புரிச் செலவுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தாமதத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அரசாங்க கடன்களில் செலுத்தப்படும் வட்டிகள் மற்றும் அத்தகைய பிற நலச் செலவுகள் போன்ற அன்றாட செலவுகளை பராமரிக்க போதுமான நிதி திறைசேரியிடம் இல்லை.
2023 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அமைச்சுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களிலிருந்தும் 5% குறைக்குமாறு அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கினார்.
N.S