Saturday, July 27, 2024

Latest Posts

சர்வதேச கடன் வழங்குநர்களால் இலங்கைக்கான கடன் தடைப்படுகிறது!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்ய முடியாமல் திணறி வரும் இலங்கைக்கு, நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அளவில் செல்வாக்குடைய முதலீட்டாளர்களின் வலுவான எதிர்மறையான கருத்துக்கள் காரணமாக, உதவிகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டுள்ளதாக உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் குழு வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க, கடனை தீவிரமான முறையில் குறைக்க வேண்டும் என சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய கடன் நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச சமூகத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இலங்கை போராட வேண்டியிருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“புவிசார் அரசியல் சூழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும் தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு போதுமான அளவு கடனைக் குறைக்க வேண்டும்” என்பது அவர்களின் பரிந்துரையாக அமைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிபுணர் ஆச்சாரினி ஜயாதி கோஷ், பரிஸில் உள்ள பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் தோமஸ் பிகெட்டி, கிரீஸின் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வரூபாகிஸ் உள்ளிட்ட 182 பேரின் கையெழுத்துக்கள் கொண்ட கடிதத்தில், முதலீட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் துறை கடன் வழங்குபவர்களே, கடன் தொடர்பான ஒப்பந்தத்தை அடைவதில் தடையாக செயற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 “இலங்கையின் கடன் பேச்சுவார்த்தைகள் இப்போது முக்கியமான கட்டத்தில் உள்ளன.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “விரைவில் அதிக நிதியை வழங்குவதற்கான உத்தரவாதத்தை வழங்கும் வகையில், அனைத்து கடன் வழங்குநர்களும், இருதரப்பு, பலதரப்பு மற்றும் தனியார், மறுசீரமைப்பின் சுமைகளை சுமக்க வேண்டும்.”

இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் 40% தனியார் கடனாளிகளுக்கு சொந்தமானது. அவற்றில் பெரும்பாலானவை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள். அதிக வட்டி வீதங்கள் காரணமாக அவர்கள் 50%ற்கும் அதிகமான வெளிநாட்டு கொடுப்பனவுகளைப் பெறுவதாக நிபுணர் குழு வாதிடுகிறது.

“அத்தகைய கடனளிப்பவர்கள் இலங்கைக்கு கடன் வழங்குவதில் தங்களின் ஆபத்தை தடுக்க அதிக தவணைகளை வசூலித்து பெரும் இலாபம் ஈட்டியதோடு, இது கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை முதல் முறையாக கடன் தவணையை செலுத்தாமைக்கு வழி வகுத்தது. ‘ஆபத்தான தவணைகள்’ மூலம் அதிக இலாபம் ஈட்டிய கடனாளிகள் அந்த அபாயத்தின் விளைவுகளைச் சுமக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை மீள செலுத்தாத நிலையில், சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கடன் வழங்குநர்களுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் பொதி இலங்கையின் கடனை மீள செலுத்துவதற்கான நிலைமையை பேணும் பட்சத்தில் மாத்திரமே கிடைக்கும். தனியார் கடன் வழங்குநர்களின் கடுமையான நிலைப்பாட்டினால் இலங்கைக்கு பாதகமான பரிவர்த்தனைகளே கிடைக்கும் என நிபுணர்கள் குழு அச்சம் வெளியிட்டுள்ளது. 

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.