தெஹிவளை கடற்கரைச் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (09) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அந்த ஹோட்டலின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், தெஹிவளை பீட்டர்சன் வீதியில் அமைந்துள்ள “சி ஷார்க்” ஹோட்டலின் உரிமையாளரான, 55 வயதுடைய சாந்த பாலசூரிய என்பவராவார்.
சம்பவ நேரத்தில் ஹோட்டலுக்குள் இருந்த அவர் மீது, மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு வந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இருவர், நேற்று இரவு சுமார் 7.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் தலை, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கடுமையான காயங்களை அடைந்த ஹோட்டல் உரிமையாளர், களுபோவிலா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவீனியா பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் தெஹிவளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டில் பதிவான இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். இவ்வாறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இதுவரை இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
