நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவ்வாறான ஆபத்து எதுவும் இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டிலும் இவ்வாறான அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை எனவும் கப்ரால் தெரிவித்தார்.
வரலாறு நெடுகிலும் நாடு அவ்வப்போது வங்குரோத்து நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும் எந்தக் காலத்திலும் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ‘2022 இலங்கைப் பொருளாதாரம்: சவால்களும் தீர்வுகளும்’ தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதும் நிலையாகிவிட்டதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமம் இல்லை என்றும் கப்ரால் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களிடம் கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இருந்தன, ஆனால் ஆண்டின் இறுதியில் 06 பில்லியன் கடன் தவணைகளில் திருப்பிச் செலுத்த முடிந்தது, என்றார்.