கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கு இடையேயான மோதல் தொடரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் 26 பேர் காயமடைந்து வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் 26 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலும் 25 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய மோதலில், கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 10 கைதிகள் இன்று (13) காலை புலஸ்திபுர பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பல்வேறு காரணங்களுக்காக மோதலில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் 2 மணியளவில் உணவு தொடர்பாக இரண்டு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சுமார் 24 கைதிகள் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த 3 பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.