”யார் தமிழ் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சித் தேர்தலிலேயே அது தெரியும்.”
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்றும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடைசியாகக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என சம்பந்தன் ஐயாவிடம் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது.
அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக நாம் அவர்களுடன் மோதுவதோ, அவ்விடயத்தை சவாலுக்கு உள்ளாக்கவோ போவதில்லை. நன்றாக அந்தப் பெயர்களைப் பயன்படுத்தட்டும்.
இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி ஆனந்தசங்கரி கொண்டு போன போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என்று உறுதியாக கூறினார் சம்பந்தன்.
சும்மா விடுங்கள் என்றார் சம்பந்தன். சங்கரியையும் அவரது கட்சியையும் மக்கள் சும்மா விட்டு விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர் விடயத்திலும் சும்மா விட வேண்டியதுதான். தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” – என்றார்.
N.S