கொழும்பு, கடலோர காவல் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று (16) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜிந்துபிட்டிய 125 வத்த பகுதியில், மூன்று சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத குழுவொன்று இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையாக காயமடைந்த ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 44 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி ஆகிய இரு குழந்தைகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
