ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் யாவும் இன்று நிறைவடைந்தன.
நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸர்தீன் உள்ளிட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனிடையே, குறித்த நீதிபதிகள் குழாம் முன்னிலையில், ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி நாமல் பலல்லே இந்த வழக்கை தாக்கல் செய்யாமல் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பரஸ்பர ஆவணங்களை வழங்கி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் தொடர்பில் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக நீதிபதி ஆதித்ய பட்டபெதிகே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள 31 ஆவணங்களில், 6 ஆவணங்களில் முதற்பக்கம் இருக்கவில்லையென முறைப்பாட்டாளர் தரப்பில் ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியமளித்த பொலிஸ் தலைமையகத்தின் புலனாய்வு அறிக்கையிடல் பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிமல் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு ஆவணங்கள் காணாமற்போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.