கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பொருளாதார வேலைத்திட்டத்தை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக செயல்படுத்தினால், மீண்டும் கடன் மறுசீரமைப்பிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பொருளாதார வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால், 2028 அல்லது 2032 ஆண்டுகளில் கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உருவாகாது என்றும் அவர் கூறினார்.
எனினும், பொருளாதார வேலைத்திட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், கடன் மறுசீரமைப்பிற்கான தேவை மீண்டும் உருவாகக்கூடும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை 8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த எதிர்பார்ப்பதாகவும், கடன் தவணை செலுத்தல்களை கருத்தில் கொள்ளும்போது, சுமார் 4 பில்லியன் டொலர் அளவிலான அதிகபட்ச கடன் செலுத்த வேண்டிய ஆண்டு 2025 எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன் தவணைகளின் அடிப்படையில், அதிகபட்ச தொகை செலுத்த வேண்டிய ஆண்டு 2030 ஆகும் என்றும், அந்தத் தொகை 3,556 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், 2028 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய கடன் தொகை 3,231 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறையின் கீழ், வாகன இறக்குமதி செலவுகள் மற்றும் பிற இறக்குமதி செலவுகளை மேற்கொண்ட பின்னரும் கடன் தவணைகளை செலுத்தும் திறன் நாட்டிற்கு இருப்பதாக அவர் கூறினார்.
இந்த திறன் கடந்த மூன்று ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது “2028 அச்சம்” என்ற ஒன்றை உருவாக்கும் முயற்சியே நடைபெறுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2028 ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டு நாணய கையிருப்புகளை வைத்திருக்கும்போது, ரூ. 3.2 பில்லியன் அளவிலான கடனை செலுத்த முடியாத நிலை எவ்வாறு ஏற்படும் என்பதை தான் கேள்வி எழுப்புவதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
