ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலானது குடும்பம்,பங்காளிகளை பாதுகாக்கும் அரசியலன்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசியலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
18 இலட்சம் வரையான நெற் பயிர் செய்கையாளர்களையும் பெருந்தோட்ட பயிர் செய்கையாளர்களையும் அரசாங்கம் பாதாளத்திற்கு தள்ளியுள்ளதாகவும் தற்போது உரம்,சமையல் எரிவாயு,சீனி,அரிசி போன்றவை மாத்திரமின்றி முழு அரசாங்கமும் தர அற்றதாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் இயங்கும் ஐக்கிய இளைஞர் சக்தியின் கேகாலை மாவட்ட மாநாடு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இளைஞர்களை கல்வி,அரசியல்,பொருளாதார,சுகாதார,கலாச்சார, மற்றும் மார்க்க ரீதியாக ஊக்குவிப்பதே ஐக்கிய இளைஞர் சக்தியினுடைய கொள்கையின் நோக்கமாகும் என கூறிய எதிர்க்கட்சி தலைவர், என்னுடைய ஆட்சியின் கீழ் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையை இளைஞர்களை மையமாக கொண்டு ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
எவராயினும் நாட்டு மக்களின் பணத்தையோ அல்லது அரச உடைமைகளையோ மோசடி செய்திருப்பின் அவர்களை நிபந்தனைகள் எதுவுமின்றி சட்டத்தின் முன் நிறுத்தி,தண்டனை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கொள்கையாகும் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர், குறித்த பணங்களை பெற்று உடனடியாக மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் என்றும் கூறினார்.
தமது வயிற்றையும் பொக்கெட்டுகளையும் நிரப்புவதற்காக அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய அவர்,அது எதிர்கால அரசாங்கத்தின் நிலையான கொள்கை என்றும் குறிப்பிட்டார்.
அன்று ஜே.ஆர்,பிரேமதாச,லலித், காமினி உள்ளிட்ட அரசியல் செயற்திறன் மிக்க ஞானிகள் அதற்கு முன்பு இருந்த தூர நோக்கற்ற ஏழாண்டு கால ஆட்சியின் ஊடாக படு மோசமாக சீரழிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்காக பாரிய புரட்சியை முன்னெடுத்ததாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அந்த யாதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை மனதில் நினைத்து, வெறும் வார்த்தைகள்,பொய் வாக்குறுதிகளுக்கு பதிலாக யதார்த்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாக தான் விசேட அவதானம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இளைஞர்களுக்காக விசேட கொள்கை பிரகடணம் வெளியிட்டு எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டத்தை சான்றுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.