பாராளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கும் ஒரு சில பெண் உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அது தொடர்பில் உரிய விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஒழுக்க மீறல் சம்பவங்களின் போது, அது தொடர்பான விசாரணைகள் சபாநாயகரின் வழிகாட்டுதலின் கீழ் மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும், விரைவான விசாரணைகளுக்கு சபாநாயகர் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், எந்த விதத்திலும் அதில் தலையிடுவதோ அல்லது செல்வாக்குச் செலுத்துவதோ இல்லை எனவும் குஷானி ரோஹணதீர வலியுறுத்தினார்.
இந்தத் துன்புறுத்தல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவருக்குக் கடிதம் மூலம் அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று வெளியாகும் செய்தியும் முற்றிலும் பொய்யானது என்றும், அவ்வாறான கடிதமொன்று இதுவரை எதிர்க்கட்சித் தலைவருக்குக் கிடைக்கப்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் உறுதி செய்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.