மூன்று வேளையும் சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்த மக்கள் மிகவும் அநாதரவாகி விட்டதாகவும், உரத்தை தடை செய்த அரசாங்கம் அதனை பயிரிட்ட மக்களின் வருமானத்தை அழித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையும், இன்று எமது நாட்டுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடும் குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் அரசாங்கத்தின் பதில் கொரோனா என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், கொரோனா பேரழிவிற்கு மத்தியில் எழுச்சி பெற்ற நாடுகள் இருப்பதை அரசாங்கம் மறந்துவிட்டதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டை முல்கிரிகலவில் ஐமச மித்தேனிய தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிக்கு வந்த பின்னர் கோடீஸ்வரர்கள் மற்றும் நண்பர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கிய அரசாங்கத்தின் செயற்பாடே இந்த மோசமான வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஏறக்குறைய அனைத்து சர்வதேச நிதி மதிப்பீடுகளாலும் நாடு அதிக ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.