2022 ஜனவரி 17ஆந் திகதி பெய்ஜிங்கில் உள்ள தூதரகத்தால் நடாத்தப்பட்ட ஒரு கவர்ச்சியான நிகழ்வில் இலங்கையின் இரத்தினக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ‘லார்வினர் – ஜெம் ஆர்ட் ஜூவல்லரி’ இன் அனுசரணையுடன், பிரமிக்க வைக்கும் இலங்கையின் நீல மாணிக்கம் மற்றும் ஏனைய வண்ணக் கற்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல உயர்தர வர்த்தகர்கள் உட்பட அழைக்கப்பட்ட சுமார் 100 விருந்தினர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
‘லார்வினர் – ஜெம் ஆர்ட் ஜூவல்லரி’ இலங்கையின் சிறந்த நீல மாணிக்கம் மற்றும் இரத்தினக்கல் தொழிலை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்த்தது.
இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு விழா மற்றும் ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகளை தூதரகம் ஏற்பாடு செய்து வருகின்றது. முன்னதாக, சுற்றுலா நிகழ்வும் ஊடக நிகழ்வும் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிதிகளை வரவேற்று உரையாற்றிய தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகத்தின் வரலாறு மற்றும் சுரங்க செயன்முறை, வெட்டுதல், மெருகூட்டல் மற்றும் ஆபரணங்கள் செய்தல் குறித்து விளக்கினார். இவற்றை நேரில் காண இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார். எதிர்காலத்திலும் இவ்வாறான சிறிய கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்த தூதுவர், இலங்கையிலிருந்தும் கண்காட்சியாளர்கள் பங்குபற்றுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தார்.
லார்வினரின் உரிமையாளரான திருமதி. மெய்மெய், தாம் நீண்ட காலமாக இலங்கையில் இருந்து வண்ண இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து வருவதாகவும், ஏனைய நாடுகளின் இரத்தினக் கற்களுடன் ஒப்பிடும்போது இவை மிகவும் உயர் தரத்தில் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இலங்கையில் இருந்து வரும் நீல மாணிக்கங்கள் சிறந்த தரம் வாய்ந்தவையும், சீனாவில் விற்பனை செய்யப்படும் 90மூ க்கும் அதிகமான கற்கள் இலங்கையின் முதன்மையான நீல மாணிக்கங்களாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
லார்வினர் கண்காட்சி பார்வையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக சான்றளிக்கப்பட்ட நீல மாணிக்கங்கள் மற்றும் இலங்கையின் ஏனைய வண்ண இரத்தினக் கற்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கியது.
கண்காட்சியின் போது, ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் நடைபெற்றதுடன், இதில் பல பங்கேற்பாளர்கள் லார்வினர் வழங்கிய விலைமதிப்பற்ற நகைகளை வென்றனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தூதுவர் வழங்கிய ஆடம்பரமான இலங்கையின் இரவு விருந்துடன் கண்காட்சி நிறைவுற்றது.





