கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கொள்கலன் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் கொள்கலன் போக்குவரத்து வாகனத்துடன் மோதி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் உட்பட மூவர் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அமைச்சர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.