டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலரை கண்டறியும் பொறுப்பை இலங்கை மத்திய வங்கி ஏற்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மத்திய வங்கியின் ஆளுனர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தேவையான டொலர் தொகையை முன்கூட்டியே அறிவிக்குமாறு மத்திய வங்கியின் ஆளுநர் கோரியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள நாளாந்தம் மின்சாரத்தை துண்டிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மத்திய வங்கி வழங்கிய வாக்குறுதியின் பேரில் அந்தத் தீர்மானம் மீளப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைத்தொழில் மற்றும் போக்குவரத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 400 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும், மின்சாரத்திற்கான டீசல் மற்றும்
எரிபொருளை வழங்குவதற்கு மேலும் 50 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் இது மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் 45 வீதமாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.