மிக அண்மையில் ஓர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காணோளியை பார்வையிட்டடேன். அதில் ஓரு பேச்சாளர், ‘யார் மக்களின் சமூக பொருளதார நலன்களில் அக்கறை கொண்டவர்களென்ற’வினாவை முன்வைத்து உரையாற்றினார். இவரின் உரையின் பிரகாரம், அரசியல்வாதிகள் என்பவர்கள் தினமும் தமது அடுத்த தேர்தலை பற்றிய சிந்தனை கொண்டவர்ளே தவிர, மக்களின் நலன்களிலோ எதிர்காலத்திலோ அக்கறை கொண்டவர்கள் அல்ல என்ற விடயத்தை முன்வைத்தார்.
இவ் காணோளியை என்னால் சகல தமிழ் அரசியல்வாதிகளிற்கும், தெற்கின் சில அரசியல் பிரமுகர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விடயத்தை இரு வருடங்களிற்கு முன், ஓர் செவ்வியில் – ஈழத்தமிழரிடையே காணப்படும் தேர்தல்வாதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படியான சுகபாவனைகள், பழக்க வழக்கங்கள், செயற்திட்டங்களை கொண்டவர்கள் என்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
இவ் அடிப்படையில், இன்று ஈழத்தமிழரிடையே, மிகவும் கடுமையாகவும் என்றுமில்லாதவாறு இடம்பெறும் பேச்சு பொருள் – 13வது திருத்த சட்டம். இது பற்றி யாவரும் நன்றாக அறிந்து அனுபவப்பட்டுள்ள காரணத்தினால், இதனது சரித்திரத்திற்குள் செல்வதை தவிர்த்து கொண்டாலும், சரித்திரத்தை மேலோட்டமாக தட்டி செல்ல வேண்டிய தேவையுள்ளது.
இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் என்பது 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்தியா ஒப்பத்தந்தின் அடிப்படையில், 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி மாகணங்களிற்கான உள்ளக சுயநிர்ணய உரிமையை வழங்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இவ் 13வது திருத்த சட்டம். ஏறக்குறைய முப்பத்தைந்து வருடங்களிற்கு முன் சிறிலங்காவின் அரசியல் அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான ஓர் திருத்த சட்டம். ஆனால் இதில் என்ன உள்ளது என்ன இல்லை என்பதை நாம் அனுபவரீதியாக கண்டுள்ளோம்.
ஈழத்தமிழரிடையே இது ஓர் புகம்பம் எனலாம். காரணங்கள் பல. ஒன்று இவ் திருத்த சட்டம் தமிழீழ மக்களுடைய அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக திருப்திப்படுத்துவதாக காணப்படவில்லை. அடுத்து, அவ்வேளையில் ஆயுத போராட்டத்தை அர்பணிப்புடன் முன்னின்று நடாத்திய தமிழீழ விடுதலை புலிகள், தம்மால் தொடர்ந்து போராடி, 13வது திருத்த சட்டத்திற்கு மேலான வெளிவாரியான சுயநிர்ணய உரிமையான, தனி நாட்டை, அதாவது தமிழீழத்தை அமைக்க முடியும் என்ற திடமான நம்பிக்கையிருந்தது. அதை காலப்போக்கில், தமிழீழ விடுதலை புலிகள் நிருபித்தும் காண்டினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
1987ம் ஆண்டில் இந்திய சமாதானபடையுடனான யுத்தம் ஆரம்பமாகும் வரை, இந்தியாவுடன் நாம் ஓர் எதிர்பு அரசியலை, அதாவது வெளிப்படையான ஓர் அரசியல் பகைமையை கொண்டிருக்கவில்லை என்பதையும் இங்கு யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவுடனான அரசியல் பகமை
இந்தியாவுடனான எமது உண்மையான வலுவான அரசியல் பகமை என்பது, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் உருவாகியது என்பதற்கு மேலாக, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே ஆரம்பமாகியது என்பதையும் யாரும் இங்கு மறுக்க முடியாது. இதை வேறு வார்த்தையில் கூறுவதனால், தமிழ்நாட்டு மக்களோ, இந்தியாவின் மற்றைய மாநிலத்தின் மக்களோ, இந்திய சமாதான படையுடனான சமரின் வேளையில் தமிழீழ விடுதலை புலிகளை, ஓர் விடுதலை இயக்மாகவே பார்த்தனர் என்பதும், பிரதமர் ராஜீவ் காந்தியின் துன்பியல் சம்பவத்தை தொடர்ந்தே, அவர்களது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்திய ஆய்வாளரின் கருத்து காணப்படுகிறது.
பல நெருகடிகள், இடைவெளிகள், அழிவுகளை தொடர்ந்து, சிங்கள பௌத்த அரசினது 13வது திருத்த சட்டம் மீதான வெறுப்பின் மத்தியில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்கள், 13வது திருத்த சட்டம் பற்றி உரையாட விவாதிக்க கதைக்க ஆரம்பித்துள்ளனர். இது எதற்காக? ஏன்? என்ற விடயங்களை நாம் முதலில் ஆராய வேண்டும்.
எதற்காக என்ற வினாவிற்கான விடை என்னவெனில் – இன்று எம்மிடம் தமிழீழ விடுதலை புலிகள் காலத்திலிருந்த நடைமுறை அரசோ, ஆயுதபலமோ, பாரீய நிலப்பரப்போ இல்லாதது மட்டுமல்லாது, நம்மிடையே ஐக்கியம் என்பது அறவே கிடையாது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதேவேளை, அன்று போல் அல்லாது இன்று பல அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளதுடன், மக்கள் மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள், கடந்த பன்னிரன்டு வருடங்களாள தள்ளப்பட்டு, அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் அதாவது இருப்பிட வசதியின்றி, உண்ண உணவின்றி, நாளாந்தம் பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஒருவரும் மறுக்க முடியாது.
சமநிலை பேரம் பேசும் நிலை இல்லை
இவற்றை மிக சுருக்கமாக கூறுவதனால், தமிழீழ விடுதலை புலிகள் காலத்தை போன்று, சிங்கள பௌத்த அரசுடன் சமநிலையில் பேரம் பேசும் நிலையில், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் நிலை இல்லை என்பதையும் எவரும் மறுக்க முடியாது.
இவ் அடிப்படையில், அன்று தமிழீழ விடுதலை புலிகளினால் நிராகரிக்கப்பட்ட 13வது திருத்த சட்டத்தை, நாம் ஏன் இன்று தூசி தட்டி திரும்பி பார்க்க வேண்டும் என்ற விவாதம் அறவோடு நிராகரிக்கபப்படுகிறது என்பதை நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.
இன்றைய ஜனதிபதி பதவி ஏற்று இரு வருடங்களிற்கு மேலாகியும், இன்று வரை வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு ஓர் அரசியல் பிரச்சனை உண்டு, இதற்கு தீர்வு காண வேண்டுமென்ற சிந்தனையே இல்லாத நிலையில், நாங்கள் யாவரும் 13வது திருத்த சட்டத்தை ஏற்பதா, இல்லையா என்ற விவாதங்களை மேற்கொண்டு, மேலும் மேலும் எம்மிடையே பகமைகளை அதிகரித்து கொள்கிறோம் என்பதையும் நியாயவாதிகள் ஏற்று கொள்வார்கள்.
இப்படியாக சிங்கள பௌத்த அரசினதும், அதனது ஜனதிபதியின் நிலை காணப்படும் பொழுது, ராஜதந்திரம் தெரிந்தவர்கள், சர்வதேசத்தின் அரவணைப்புடன், ஏற்கனவே சிங்கள பௌத்த அரசினால், சிறிலங்காவின் அரசியல் யாப்பில் ஏற்று கொள்ளப்பட்ட 13வது திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறை படுத்துங்களென கேட்பதில் என்ன தவறு உண்டு?
இவ் 13வது திருத்த சட்டத்திற்கு மூல கர்த்தவாகவுள்ள இந்தியா மூலமாகவே, இதை நடைமுறை செய்யுங்களென சிறிலங்காவிற்கு எம்மால் அளுத்தம் கொடுக்க முடியும். இந்தியாவுடன் இணைந்து, சர்வதேச சமூதாயமும், ஐ.நா.மனித உரிமை சபையினால் நிறைவேற்றப்பட்ட சகல தீர்மானங்களும், இதற்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
வேறு அரசியல் தீர்வை…
இந்த 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்துங்கள் என கேட்பதன் மூலம், தொடர்ந்து நாம் வேறு ஓர் அரசியல் தீர்வை கேட்கவோ, கோராவோ முடியாதென்று – எந்த பல்கலைகழகத்தினால், எந்த சட்ட கல்லுரியினால், எந்த புத்திஜீவியினால் கூறப்பட்டுள்ளது? இன்று, ஸ்கோட்லாந்து மட்டுமல்லாது, உலகில் உள்ளக சுயநிர்ண உரிமையை அனுபவித்து வரும் பல நாட்டின் தேசிய மக்கள், பிரிவினையை முன் வைக்க முடியாத நிலை உலகில் காணப்படவில்லையே.
சில வருடங்களிற்கு முன், சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஓர் ஊடகவியலாளர் எனக்கு கூறிய ஓர் கதை இங்கு நினைவிற்கு வருகிறது. அதாவது, “சில காலம் சென்ற பின்னர் உங்களிற்கு பட்டு வேட்டி சால்வை தருகிறோம், அது வரை நீங்கள் நிர்வாணமாக இருங்கள்”, என்பது போல் தான், இவ் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரான அரசியல் குசும்புகள் காணப்படுகின்றன.
சமஸ்டி என்ற மாயை, வடக்கு கிழக்கு வாழ் மக்களை பொறுத்த வரையில் 1957ம் ஆண்டு முதல் ஓர் கற்பனை பொருள். சிங்கள பௌத்த அரசிடம் நாம் இதை பெற்று கொள்வது என்பது, ‘கல்லில் நார் உரிப்பதற்கு’ சமன். இச் சொற்பதம், தமிழ் வாக்களர்களை கவருவதற்காக, தமிழ் தேர்தல்வாதிகளினால் பாவிக்கபடுகின்றதே தவிர, இதை நாம் சிங்கள பௌத்த அரசிடமிருந்த பெற்று கொள்வது என்பது பகற் கனவு.
சமஸ்டி ஓர் குசும்பு
இவ்வேளையில் இங்கு சில தேர்தல்வாதிகளின் கபட நிலைகளை காண்பிக்க விரும்புகிறேன்.
சிறிசேன-ரணில் அரசு, தமிழர் தேசிய கூட்டமைபின் (த.தே.கூ.) ஆதரவை நம்பி இருந்த காலத்தில், மூன்றில் இரண்டு பாரளுமன்ற பெரும்பான்மை அற்ற நிலையிலும், புதிய அரசியல் யாப்பு உருவாக்கவும், சமஸ்டியை பெற்று கொள்வதாக த.தே.கூ.பின் முக்கிய புள்ளியான, சட்டத்தரணியும் பாரளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் நம்பினர் என்றால் இதுவும் ஓர் குசும்பாகவே இருக்க முடியும்.
அன்று த.தே.கூ.பும், சுமந்திரனும் சிறிசேன-ரணில் அரசிடம், முதலில் 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமூல் படுத்துங்கள் என்ற நிபந்தனையை முன் வைத்திருந்தால், இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் நிலை வேறாக மாறியிருக்கும்.
அத்துடன் அன்று நீதிமன்றம் மூலம், வடக்கு கிழக்கு இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்ட வேளையில், அவ்வேளையில் சுமதந்திரனிடம், இதற்கான மீள் மனுவை செய்யுங்களென முன் வைக்கப்பட்ட வேளையில், சுமந்திரன் அதை செய்யாது காலம் கடத்திவிட்டு, இன்று வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி கதைப்பது புரியாத புதிராகவுள்ளது.
இதேவேளை ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வை பெற்று கொள்வோமென கொக்கரிக்கும் கூட்டமும், கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. காரணம், அரசியல் உரிமைகளை சரியாக வரையறைக்கப்படாதா 13வது திருத்த சட்டத்தையே கொடுப்பதற்கு முன் வராத சிங்கள பௌத்த அரசுக்களிடமிருந்து, ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்பது, எப்படி? எப்பொழுது? என்று? சாத்வீகமாக முடியும்? இது பற்றி அலட்டி கொள்பவர்கள், அப்பாவி வாக்களருக்கு மக்களிற்கு – உடனடியாக எப்படி, என்று, எப்பொழுது ஒற்றை ஆட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வு என்ற விளக்கத்தை கொடுக்க முன்வர வேண்டும்.
யாதார்தம் என்னவெனில், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் அரசியல்வாதிகளில் பெருபான்மையினர், தமது கருத்துகள் செயற்பாடுகள் யாவற்றையும், எதிர்வரும் தேர்தல்களையும் அதன் வாக்கு வங்கிகளையும் இலக்கு வைத்தே செயற்படுகிறார்கள் என்பதே உண்மை.
இல்லையேல், இன்றைய சிறிலங்காவின் யாதார்தம் உண்மைகளை தூக்கி ஏறிந்து அலட்சியம் பண்ணி விட்டு – ஒருவர் சமஸ்டி, மற்றையவர் ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு என புசத்துவது, எவ்வளவு தூரம் வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது வெளிப்படையாகிறது.
யாதார்த்த நிலை என்ன?
இன்று வடக்கு கிழக்கு வாழ் மக்களின் யாதார்த்த நிலை என்ன என்பதை, இவ் வீரவசனங்களை கொட்டி தள்ளும் அரசியல் ஞானிகள் உணர்ந்துள்ளார்களா என்பது கேள்வி கூறியாகவுள்ளது. வடக்கு கிழக்கில் தினமும் வெற்றிகரமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள், சைவ கோயில்கள் கிறிஸ்தவர்களின் இருப்பிடங்கள், நிலங்களின் நிலை என்ன எப்பதை இவ் வாக்கு வங்கியை நோக்கி வேலை திட்டங்களை மேற்கொள்ளும் தேர்தல்வாதிகள் சிந்திப்பதுண்டா?
தமிழீனத்தின் ஒற்றுமை, பிராந்திய ஒற்றுமை, தோழமை போன்றவற்றை அறவே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதிகள் – ஒற்றையாட்சிக்கு வெளியில் தீர்வு……13வது திருத்த சட்டம் வேண்டாமென கூறுவது யாவும், இவர்கள் உண்மையில் மக்களின் நலன்களில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளா என்ற சந்தேகம் எழுகிறது.
ஊதாரணத்திற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப்படும் அரசியல் கட்சிக்கு, கிழக்கு மாகணத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட வாக்குகளையும் கணக்கில் கொண்டு, விகிதாசார முறைக்கு அமைய, கடந்த தேர்தலில் மேலாதிகமாக ஓர் ஆசனம் வழங்கப்பட்டது. அவ்வேளையில், அவ் பாரளுமன்ற உறுப்பினர் பதவியை, கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட யாருக்கும் கொடுப்பதற்கு முன்வராது, சுயநலத்தின் அடிப்படையில், ஓய்வுதியத்தை மனதில் கொண்டு, யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி கண்ட ஒருவருக்கு வழங்கியது – தமிழ் தேசியம், இன, பிராந்தியா ஒற்றுமையா? இவர்கள் தான், ஒரு நாடு இரு தேசம், ஒற்றையாட்சிக்கு வெளியில், இணைந்த வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வை பெற்று தருவார்களென மக்கள் எதிர்பார்க்கிறார்களா? இவர்கள் இதை, யாரிடமிருந்து? யாரின் துணையுடன் பெற்று கொடுப்பார்கள்?
தற்போதைய வடக்கு கிழக்கு வாழ் தேர்தல்வாதிகளின் போக்கு என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் எதிர்காலத்தை பாதாள குழியில் தள்ளுவதற்கான வழி வகைகளேயே தவிர, வேறு ஒன்றுமில்லை. அதாவது, வடக்கு கிழக்கை, முற்று முழுதாக சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்கள குடியேற்றத்தை நோக்கி நகர்த்துகிறார்கள் என்பதே உண்மை.
இத் தேர்தல்வாதிகள், வடக்கு கிழக்கில் வாழும் – விதவைகள், முன்னாள் போராளிகள், ஊணமுற்றோர், அரசியல் கைதிகள் போன்றோரின் நாளந்த பிரச்சனைகள் சார்ச்சைகளில் அக்கறை கொள்ளவில்லை.
புலிகள் மாகாணசபையை நிராகரித்தார்களா?
தழிழீழ விடுதலை புலிகள் மாகாணசபையை நிராகரித்தர்களா இல்லையா என்பதற்கான பதில் தழிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகரும் தேசத்தின்குரல் மறைந்த அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி. அடல் பாலசிங்கத்தினால் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலம் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) என்ற புத்தகத்தில் பதில் உள்ளது.
மாகாணசபை பற்றிய தகவல்களை அறிய விரும்பியோர் “The Will to Freedom” (த வீல் ரு பிறிடம்) ஆங்கில வெளியீட்டின் “LTTE Stragegy and premadasa’s agenda” 256-258 என்ற பக்கங்களை படிக்கவும்.
இதே இடத்தில் ‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி (PFLT)| என்ற அரசியல் கட்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் எதற்காக 1989 ஆம் ஆண்டு பதிவு செய்தார்கள் என்பதையும், நாம் நினைவுபடுத்திகொள்ள வேண்டும்.
இவற்றை அறிந்தும் அறியாதவர்களாக, தற்பொழுது காணப்படும் ஓர் சிறிய வெற்றிடத்தை பாவித்து, தமது குறுகிய சிந்தனை எண்ணங்களுக்கும் வடிவம் கொடுத்து, இது தான் தமிழீழ மக்களது அரசியல் சித்தாந்தம் என பறைசாற்றுவது நிட்சயம் எமது இனத்திற்கு அடிக்கும் சாவு மணியே.
சிறீலங்கா அரசு 6 ஆவது திருத்தச்சட்டத்தை வாபாஸ்பெற வேண்டுமென்பதை தழிழீழ விடுதலை புலிகள் தமது நிபந்தனையாக முன்வைத்தார்களென்பதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் இதே 6வது திருத்த சட்டத்திற்கு கீழ் பாரளுமன்றத்தில் சத்தியபிரமாணம் செய்தவர்கள் தான், மக்களிற்கு ஒற்றையாட்சிக்கு வெளியில் அரசியல் தீர்வும், ஒரு நாடும் இரு தேசமும் பெற்று தரப்பபோகிறார்களா? நெஞ்சிலும் நாவிலும் உண்மை இருக்க வேண்டும்.
சிங்கள பௌத்த அரசு, 13வது திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த முடியாதுவென கங்கணம் கட்டி நிற்கிறது. இதேவேளை ஈழத்தழிழர்களில் சிலர் அக்குரோசமாக, 13வது திருத்த சட்டத்தை நடைமுறை செய்யுமாறு வலியுறுத்தியவர்களை கண்டிக்கிறார்கள். இவ்விடயத்தில் சிங்கள பௌத்த அரசிற்கும் 13வது திருத்த சட்டத்தை எதிர்க்கும் தமிழரிடையே மாபெரும் ஒருமைபாட்டை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இது திட்டமிட்ட அணுகுமுறையா என பலர் சந்தேகிக்கிறார்கள்.
புலம்பெயர் தேசம்
புலம்பெயர் தேசத்தில், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர், அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பலனோர் புதியவர்கள். அவர்கள் ஆயுத போராட்ட காலத்தில், பார்வையாளராக காணப்பட்டவர்கள். இதில் பலர் உணர்ச்சிவச அரசியல் செய்கிறார்கள், சிலர் நாட்டில் உள்ள தேர்தல்வாதிகளை திருப்திப்படுத்தும் செயல்களை மேற்கொள்கிறார்கள். வேறு சிலர், வெளிநாட்டு புலனாய்வினரை திருப்திபடுத்துவதற்காக, அரசியல் செயற்பாடு என்ற பெயரில், புலம் பெயர் வாழ் மக்களின் ஐக்கியத்தை கூறுபோட்டு, தகவல் சேர்க்கிறார்கள். இன்னும் சிலர் எவ்வளவு தூரம் நாட்டில் உள்ள எமது உடன் பிறப்புகளிற்கு நாசம் செய்ய முடியுமோ அதை செய்கிறார்கள். சிலர் பொழுது போக்காக அரசியல் செய்கிறார்கள்.
இலங்கைதீவின் 13வது திருத்த சட்டம் பற்றிய முழு விளக்கமும் தெரியாத புலம்பெயர் வாழ் தமிழர் சிலர், தாமும் 13வது திருத்த சட்டத்திற்கு எதிரானவர் என்பதை காண்பிப்பதற்காக கூறும் விளக்கம் மிகவும் வியப்பானாது.
அவர்கள் கூறுவதாவது, மேற்குலகில் எந்த நாட்டிலும் 13வது இலக்கத்தை யாரும் விரும்புவதில்லையாம், ஏற்பதில்லையாம். இவர் கூறிய விளக்கம் எண்கணித சாஸ்திரம் பற்றியது. ஆகையால் ஈழத்தமிழர்கள் ஆகிய நாங்களும் இவ் 13ஐ ஏற்க கூடாதாம்.
மிக சுருகமாக கூறுவதனால், இதே 13வது சட்டம் மூலமாகவே அமெரிக்காவில் 1865ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி ‘அடிமை தனத்திற்கு ஏதிரான சட்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இப்படியாக பல அனுபவமற்ற ஆய்வற்ற கருத்துக்கள், இவ் நாட்களில் 13வது திருத்த சட்டம் பற்றி வலம் வருகிறது.
யாதார்தம் என்னவெனில், நன்றாக திட்டமிட்டு வடக்கு கிழக்கில் களம் இறங்கியுள்ள சீனர்களிற்கு எதிராக நாம் யாவரும் இணைந்து ஊர்வலங்கள், ஆர்பட்டங்கள், விழிப்பு போராட்டங்கள் செய்ய வேண்டி இவ்வேளையில், எம்மில் சிலர், 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பது மிகவும் வியப்பாகவுள்ளது. இவ் நகர்வு நிட்சயம் எமது இனத்தின் தற்கொலைக்கு ஒப்பானது.
யாவருக்கும் இறுதியாக ஒன்றை மட்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்ததை தொடர்ந்து, அவ்வேளையில் ஜனதிபதியாக விளங்கிய மகிந்த ராஜபச்சா, “வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு, அரசியல் தீர்வாக பஞ்சாயத்து முறையே மிக சிறந்த தீர்வு”என கூறியிருந்தார். ஆகையால், சிந்திக்க தெரிந்தவர்கள் சிந்திந்து செயற்பட தவறும் பட்சத்தில், நாம் இறுதியில் பஞ்சாயத்து முறையை ஏற்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.
நாம் எமது லச்சியத்தை அடைவதற்கு, மாற்றுவழிகளை பின்பற்றலாமென எமது முன்னோடிகள் கூறியுள்ளார்கள். இதேவேளை, நமது லட்சியத்திற்காக தமது அர்பணிப்புகளை செய்தோருடை கனவு பலிக்க வேண்டுமாயின், மாற்று வழி மூலம் லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை நாம் கையாள வேண்டும் என்பது உலக அனுபவம்.
ச. வி. கிருபாகரன்
பிரான்ஸ்