Thursday, January 16, 2025

Latest Posts

நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் விசாரணை

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் கேள்வி எழுப்பிய விதம் உரிமை மீறல் என விமலசேன லவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

“மாவீரர் தினத்தை செய்வதற்கு உங்களுக்கு அனுமதி தந்தது யார்? அனுமதி எப்படி எடுத்தீர்கள்?புலம்பெயர் மக்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் வருகிறதா? டயஸ்போராவில் யாருடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறது.? மாவீரர் தின நிகழ்வுக்கு ஏன் சென்றீர்கள் எனக் கேட்டார்கள்? அவர்களது முழு விசாரணையும் உரிமைகளை மறுக்கின்ற விடயங்களை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.”

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி காலை வாழைச்சேனை பொலிஸார் அவரை 27ஆம் திகதி காலை மட்டக்களப்பு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அறிவித்தனர்.

காலை 11 மணியளவில் அங்குச்  சென்ற தம்மிடம் மதியம் இரண்டு மணி வரை விசாரணை நடத்தப்பட்டதாக விமலசேன லவகுமார் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தரவை  மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் கேள்வி எழுப்பியதாக விமலசேன லவகுமார் கூறுகிறார்.

“முள்ளிவாய்க்காலில் கொண்டாடியதற்காக நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். இது எங்கள் உரிமை என்றேன். இறந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்வது நமது கடமை என்று நான் கூறினேன். ஏன் கஞ்சி கொடுக்கிறீர்கள்? கஞ்சி கொடுக்க என்ன காரணம் என்று கேட்டார். நான் அதை விளக்கினேன்.”

யுத்தத்தின் இறுதி நாட்களில் கடற்கரையில் குறுகிய நிலப்பரப்பில் சிக்கித் தவித்த தமிழ் மக்கள், கனரக ஆயுதத் தாக்குதலுக்கு மத்தியில் மனித அடிப்படைத் தேவைகளான மருந்து, உணவு போன்றவற்றை இழந்த நிலையில், பல நாட்களாக அரிசியுடன் நீரில் சிறிதளவு உப்பிட்டு சமைத்த கஞ்சியுடன் உயிர் பிழைத்தனர்.

அந்த உணவு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

பன்னிரண்டாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2021ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மட்டக்களப்பு கிராண் கடற்கரையில் நினைவேந்தல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி விமலசேன லவகுமார் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

அதே வருடம் டிசம்பர் 8 ஆம் திகதி, நீதிமன்றம் விமலசேன லவகுமாரை பிணையில் விடுவித்ததுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில், நீதிமன்றம் 2022 மார்ச் மாதம் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்ததாக அவர் கூறுகிறார்.

2023 ஒக்டோபரில், யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரச அமைச்சர் ஒருவரைப் பற்றி அவர் வெளியிட்ட கருத்தின் பின்னர், விமலசேன லவகுமாரும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் கும்பலிடமிருந்து கொலை அச்சுறுத்தல்ளை எதிர்கொண்டார்.

ஒக்டோபர் 3ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய விமலசேன லவகுமார், ஒக்டோபர் 2ஆம் திகதி இரவு 11.33 மணியளவில் மட்டக்களப்பு கிராண் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஆறு பேர் கொண்ட குழுவொன்று வந்து தம்மை அச்சுறுத்தியதாக குறிப்பிட்டார்.

“தீவுச்சேனை என்னும் மறைக்கப்பட்டிருந்த விடயம்.அதனை கதைப்பதற்கோ அதனை மறுபடியும் தோண்டியெடுப்பதற்கோ நீங்கள் எத்தனிக்க கூடாது. அதனை செய்திருக்க கூடாது. இன்றைய நாளில் உங்களை கொல்லவே வந்தோம். ஆனால் முதலாவதாக உங்களை எச்சரிக்கின்றோம். உங்களைப் போன்றவர்களுக்காக எமது ஆயுதங்களை பழையபடி தூசி தட்டவேண்டிய நிலைமை வந்திருக்கின்றது. மீண்டுமொரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நிச்சயமாக உங்களை போடுவோம். என்று என்னை அச்சுறுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். 

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.