பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை இலங்கை பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்துள்ளார்.
நவம்பர் 18, 2024 அன்று ஆனந்த விஜேபாலவை பொதுப் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நியமித்ததாகவும், டிசம்பர் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட சண்டே டைம்ஸ் செய்தித்தாள், ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பணிக்குழு தலைமைப் பணியாளராக நியமிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்த மனுதாரர், ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பணிக்குழு தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி என்பதால் ஒரு அரச பதவியில் இருந்தாலும், அத்தகைய பதவியை வகிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க அவருக்குத் தகுதி இல்லை.
அதன்படி, அரசியலமைப்பின் படி அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்கவும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கவும் தீர்மானம் பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராக அமருவதையும், நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதையும் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும், அவர் பொது பாதுகாப்பு அமைச்சராக செயல்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.