நீர் கட்டணங்களை செலுத்தாத முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தகைய 45 முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சு மட்டத்தில் தமக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுள்ளதால், செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை அந்தந்த அமைச்சுக்கள் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு இவர்களில் சிலர் தமக்கு அறிவித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இத்தகைய முறைமையொன்று இல்லையென்பதால் தம்மால் கட்டணங்களை செலுத்த இயலாதென அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமை தொடர்பில் அமைச்சரவைக்கு அறியப்படுத்தி இறுதித் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
அமைச்சரவையினால் வழங்கப்படும் பதிலுக்கு அமைவாக செயற்படாத, கட்டணத்தை செலுத்துவதில் இருந்து தவறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுமென நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.