கம்பளை நகரில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் முன்பள்ளியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.
நேற்று காலை குறித்த பாடசாலையை ஒட்டியுள்ள காணியில் உள்ள மரக்கிளை ஒன்று இவ்வாறு முறிந்து விழுந்ததில் முன்பள்ளியைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கம்பளை – இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த மொஹமட் செய்யிம் அஸ்வி என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த மற்றுமொரு குழந்தை கம்பளை மருத்துவமனையில் இருந்து கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றது.
மேலும் இருவர் சிகிச்சை பெற்று வெளியேறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் குறித்த முன்பள்ளியைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இக்கிளை விழுந்த காணிக்கு முன்பாக மற்றுமொரு பாலர் பாடசாலையும் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உயிரிழந்த மாணவன் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையின் அதிபரிடம் வினவிய போது குறித்த மரம் விழும் அபாயம் இல்லாத காரணத்தினால் குறித்த மரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.