இன்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தமை விசேட நிகழ்வாகும்.
பாராளுமன்றம் ஆரம்பிக்கும் போது, ஜனாதிபதி உரையை ஆரம்பித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியதைக் காணமுடிந்தது.
எதிர்க்கட்சித் தலைவருடன் உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளியேறிய போதிலும், ராஜித சேனாரத்ன, குமார் வெல்கம, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இஷாக் ரஹ்மான், வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பௌசி மற்றும் பைசல் காசிம் ஆகியோர் சபையில் இருந்தனர்.
ஜனநாயக இழப்பு, பேச்சு சுதந்திர இழப்பு, அமைதியான போராட்டங்கள் மீதான தாக்குதல்கள், பாரிய வாழ்க்கைச் சுமை உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் ஜனாதிபதியின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதியின் உரையில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாத்திரமே கலந்துகொண்டார்.