Saturday, November 23, 2024

Latest Posts

ஈழத்து அந்தணர் பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்கள் – வில்லூன்றி கந்தசாமி கோவில், திருக்கோணமலை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆட்சியில் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆபத்து எற்பட்டபோது ஆறுமுக நாவலர் தோன்றி இலங்கையில் தமிழையும் சைவத்தையும் அழியவிடாது வளர்த்தார். அவரின் காலத்தின் பின்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவாமி விபுலாநந்தரும் அந்தண குல திலகருமாகிய பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்களும் தோன்றி தமிழையும் சைவத்தையும் வளர்த்தெடுத்தனர்.

திருக்கோணமலை வில்லூன்றி கந்தசாமி கோவிலில் பிரதான குருக்களாக இருந்த பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக் குருக்களை நினைவுகூருமுகமாக, அவரின் நினைவு மலர் மற்றும் திருக்கோணமலை வில்லூன்றி கந்தசாமி கோவில் ஸ்தல வரலாறு ஆகியவற்றை ஆதரமாகக்கொண்டு அவரின் சிறப்புகள் தொகுக்கப்பட்டு இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைத் திருநாட்டிலே, சைவமும் தமிழும், நமது பண்பாடும் சிறப்படைய சமஸ்கிருத மொழியையும், வைதீக ஆகம, சமய நெறிகளையும் வளர்த்து அரும்பெரும் பணிபுரிந்த சிவாச்சாரியார்களுள் தலைசிறந்த பேரறிஞராய் திகழ்ந்த ஒரு சிலருள், தனிப்பெருமை வாய்ந்தவரான பிரம்மஸ்ரீ இ.கு பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆரிய (சமஸ்கிருதம்) திராவிட(தமிழ்) பாஷா விற்பன்னரென பெருமை பெற்று, இவ்விரு மொழிகளின் இலக்கிய இலக்கணங்களில் திறமை மிக்கவராகவும் ,பேச்சு வன்மை மற்றும் கட்டுரை புனைவதில் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்கினார்.

தோற்றம்

புண்ணிய பூமியாம் பாரத தேசத்தின் தமிழ் நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு எனும் புகழ் பெற்ற இடத்திலிருந்து இலங்கை திருகோணமலையில் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காக, ஐந்து தலைமுறைக்கு முன்னே வந்த மைத்திரா வர்ண கோத்ரத்தை சேர்ந்த பிரம்மஸ்ரீ சுப்பையர் எனும் புகழ் பெற்ற சிவாச்சார்யரின் வழித்தோன்றலில் வந்தவரே பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள் ஆவார். பிரம்மஸ்ரீ சுப்பையரின் மகன் பிரம்மஸ்ரீ கோபால பட்டர். பிரம்மஸ்ரீ கோபால பட்டரின் மகன் பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்கள். பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வரக்குருக்களின் மகன் பிரம்மஸ்ரீ ராமலிங்க குருக்கள். பிரம்மஸ்ரீ ராமலிங்க குருக்களுக்கும் அன்னபூரணி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவரே பிரம்மஸ்ரீ பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள் ஆவார். இவர் தோன்றியது வருஷம் 1896 தை மாதம் எழாம் திகதி யாகும்.

கல்வி

“அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான் “

என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப, அறநெறி பேணி, எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டி, இன்சொல் பேசி, தன் இல்லம் நாடிவருவோர்க்கு குறைவில்லாது ஈகை செய்தும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பியும், அனைவரின் அன்பையும் பாசத்தையும் பெற்று வாழ்ந்த பெருமைக்குரியவர் பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள். இப்பெருமகனார், பல அறிஞர்கள் வாழ்ந்து சைவத்தை வளர்த்து வரும் நகராகவும், மக்கள் கீழ்நிலை நீங்கி மேனிலை ஓங்குவதற்காக நீள்கவி புராணம் ஓதும் மாநகரகமாகவும் விளங்கும் யாழ் நகரிலுள்ள வண்ணார் பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் பாடசாலைக் கல்வியைக் கற்றுக்கொண்டார்.

தேவபாஷையையும், செந்தமிழ் மொழியையும் ஐயமின்றி கற்றறிய விரும்பி, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரையும் நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதரையும் அணுகினார். அவர்களிடம் தமிழையும் ஸமஸ்கிருதத்தையும் மரபு நெறி தவறாது கற்று, அதில் ஆழ்ந்து திளைத்தது மட்டுமன்றி,. வடமொழி தென்மொழி நூல்களின் தொன்மை நிலையை தெரிந்துகொள்ள பலமுறை கற்று , ஆரிய (ஸமஸ்கிருதம்) திராவிடப் (தமிழ்) பாஷையில் எண்ணரும் பண்டிதன் ஆயினார் .

பின்னர் முருகனை நினைந்து உருகிய அன்பினால், திருமுறை ஓதும் திருச்செந்தூரில் அருமறை ஆகமப்பாடசாலையில் குருகுல முறைப்படி வடமொழியும் வேதாகமங்களும் பயின்றார். திருவையாற்றினில் அமைந்த திருமண மஹாலில் காஞ்சிப் பெரியவரின் திருவுளப்படி அருமறை ஆகமப்பொருள் பல ஆராய்ந்து,கற்றவர் நயக்கும் வகையில் சொற்பொழிவற்றி பேரறிஞராய் திகழ்ந்தார்.

சைவத் திருப்பணி

திரேத யுகத்தில் ராமபிரான் விஜயம் செய்து தன்னுடைய கோதண்டம் என்ற வில்லை ஊன்றியதால் வில்லூன்றியென்று பெயர் பெற்ற இடம்தான் திருக்கோணமலையிலுள்ள வில்லூன்றியாகும். தென்னிந்தியாவிலுள்ள திருவேரகத்தில், முருகப்பெருமானுக்கு புதிதாக பஞ்சலோகத்தில் விக்கிரகம் வடித்த சிற்பாசரியின் கனவில் முருகப்பெருமான் தோன்றி தம்மை ஒரு பேழையிலிட்டு இலங்கைக்கு செல்லவுள்ள கப்பலில் ஏற்றிவிடும்படி கூறினார்.அவ்வாறு முருகப்பெருமான் விக்கிரகத்துடன் வந்த கப்பல் கோணேசர் மலைக்கு அருகே கரை தட்டி அசையாமல் நின்றபோது, மீண்டும் முருகப்பெருமான் கப்பலதிகாரியின் கனவில் தோன்றி விக்கிரகம் இருந்த பேழையை கடலில் வீசினால் மட்டுமே கப்பல் அசையும் என்று தெரிவித்தார்.

கப்பலதிகாரியால் அவ்வாறு கடலில் வீசப்பட்ட பேழை கடலில் மிதந்து வந்தபோது, அடியார்கள் மீட்டெடுத்து (கி.பி 1762ம் ஆண்டு) கந்தசாமி மலை சாரல் என்ற இடத்தில் முருகன் விக்கிரகத்தை வைத்து பூஜித்தனர். பல வருஷங்களின் பின்பு ஒருநாள், முருகப்பெருமான் பூர்ணானந்தேஸ்வரக்குருக்களின் மூதாதையினர் மற்றும் ஒரு அடியாரின் கனவில் தோன்றி, வில்லூன்றியிலுள்ள சிறிய பிள்ளையார் கோவிலில் (கறுத்தப் பிள்ளையார்), முருகப்பெருமானையும் வைத்து பூஜிக்கும்படி தெரிவித்தார்.

இந்தப் பிள்ளையார் முன்பு அகஸ்திய முனிவரால் மஹாவலி கங்கைக் கரையில் வைத்துப் பூஜிக்கப்பட்டவராவார். பூர்ணானந்தேஸ்வரக்குருக்களின் மூதாதையினரும் வில்லூன்றியிலிருந்த அடியார்களும் சேர்ந்து ஆலோசித்து புதிதாக மண்டபங்கள் கூடிய கந்தசுவாமி கோவிலை பிராமணர்களால் கொடுக்கப்ப்ட்ட நிலத்தில் கட்டி எழுப்பினார்கள். புதிதாகக்கட்டப்பட்ட வில்லூன்றி கந்தசுவாமி கோவிலின் மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் விக்கிரகம் ஸ்தாபிக்கப்பட்டு, பிள்ளையாரை தென்மேற்கிலுள்ள பிரகாரத்தில் ஸ்தாபனம் செய்தனர். இவ்வாறு மிகவும் புராணப் பிரசித்தி வாய்ந்த ஸ்தலமாக வில்லூன்றிக்கந்தசுவாமி கோவில் உள்ளது. ( மேலும் விபரமான விளக்கத்திற்கு ஸ்தல வரலாற்றைப் படிக்கவும்)

பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள் பிரதான குருக்களாக இருந்தபோது, வில்லூன்றிக்கந்தசுவாமி கோவிலில் புதிதாக நவக்கிரக ஆலயம் அமைக்கவும், நவராத்திரி காலத்தில் விசேட உற்சவம் நிகழ வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்துடன் புதிதாக இராஜஇராஜேஸ்வரி அம்மனை ( இந்தியாவிலிருந்து வந்து தம்பலகாமம் கோணேஸ்வரர் ஆலயத்திருப்பணி செய்து கொண்டிருந்த ஸ்ரீ வைத்தியநாத ஸ்தபதியார் மூலம்) வார்ப்பிக்கவும் ஏற்பாடுகளைச் செய்தார். அதைவிட, உள்வீதியில் தெற்கு மண்டபம், மேற்கு மண்டபம் அமைய ஆலோசனை கூறி, வழிகாட்டி, அதனையும் நிறைவேறச்செய்தார்.

கிரியை முறைகள் தொகுப்பு

அத்துடன், இவ் ஆலயத்தில் கந்தசஷ்டி காலத்தில் கந்தபுராணம்,மயூரகிரிப்புராணம் ஆகியவற்றிற்குத் தானே சிறந்தபாணியில் பயன்கூறி விளக்கியதோடு, பயன்கூறும் முறையைப் பலருக்கு எடுத்தியம்பியும், அதன் பலனை யாவரும் பெறும் பொருட்டு தன்னலங்கருதாது பணியாற்றிய பெருந்தகையாளர். ஆலயக்கிரியை முறைகள் சிறப்பாக நடைபெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஆலயக்கிரியை முறைகளை முறையாக வகுத்து உருவாக்கியதுடன், இலங்கையில் பல பிராமண குருமார்களுக்கும் பயன்தரும் வண்ணம் பல மூர்த்திகளின் மஹோற்சவம், பிரதிஷ்டை ஆகியவற்றுக்குரிய பல பத்ததிகளை தன் கையாலேயே எழுதி விநியோகித்து,தனெக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். அப்பத்ததிகளை இன்றும் பல ஆலயங்களில்,இலங்கையில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவியுள்ள பிரபலம் வாய்ந்த பிராமண குருமார்கள் பயன்படுத்துகின்றார்கள்.

வெளியிட்ட புத்தகங்கள் மற்றும் பத்ததிகள்

பூர்ணானந்தேஸ்வரக்குருக்கள் எண்ணற்ற புத்தகங்களையும் கையெழுத்து பிரதிகளையும் வெளியிட்டார். அவற்றில் முக்கியமான புத்தகங்களை கீழே தந்துள்ளோம்

விக்னேஷ்வர பூஜா விதி
அக்னி கார்ய உரை

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் மஹோற்சவம்

சான்றோர் தோன்றிய சித்தங்கேணியில் தோன்றிய விநாயகர் ஆலயந்தன்னில் முப்பத்து மூன்று குண்டம் அமைத்து நீண்டுயர் பத்ததி எழுதியும், முன்னேஸ்வரத்தில் அறுபத்து நான்கு குண்டங்களை நலமுற அமைத்து வேள்வி செய்து வேதியரை மகிழ்வுறச் செய்தார். மேலும், புங்குடுதீவு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ சோமசுந்தரப்பெருமானின் மகா கும்பாபிஷேகம், பருத்தித்துறை கோட்டுவாசல் கோயில் மகாகும்பாபிஷேகம், நயினை நாகபூஷணி அம்பாள் கும்பாபிஷேகமும் சிறப்பாக நிறைவேற்றியதுடன், திருகோணமலையில் கோணைநாதப்பெருமானின் கும்பாபிஷேகத்தை, இலங்கையின் பல இடங்களிலுமிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட குருமார்களை அழைத்து மிகச்சிறந்த முறையில் சிறப்புற நடாத்தி, தருநிகர் செல்வமும் தானமும் தவமும் மருவிட, உலக நலம் கருதி வாழ்ந்த குருமணியாக திகழ்ந்து ஒப்பற்ற பெருமைக்குரியவரானார்.

தமிழகம் சென்று பெருமை

“கற்றாரை கற்றாரே காமுறுவர் ” என்பதற்கிணங்க இவரின் அறிவையும் ஆற்றலையும் கண்டு, தென்னிந்திய அர்ச்சகர் சங்கம் இவரை அழைத்தபோது, அவ்வழைப்பை ஏற்று, அங்கு சென்று, திருக்கோவலூரில் குன்றக்குடி அடிகளாரின் தலைமையில், பிரதம பேச்சாளராக சைவ சித்தாந்த உட்பொருளை விளக்கி சொற்பொழிவாற்றி தாய்நாட்டுக்கு பெருமை தேடித்தந்த பெருந்தகை ஆவார். அந்தவகையில், இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட சிறந்த சிவாச்சாரியார் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவருடைய தமிழ் மொழி மற்றும் ஸமஸ்கிருதத்தின் புலமையை மெச்சும் வகையில் “ஆரிய திராவிட பாஷா விற்பன்னர்” என்ற பட்டத்தை தென்னிந்திய அர்ச்சகர் சங்கத்தினர் வழங்கினர். அத்துடன் அங்கு சைவ சித்தாந்தத்தை கற்பிப்பதற்காக ஒரு உயர் வகுப்பொன்றை ஆரம்பித்து வைத்தார்.

சிறப்பு பட்டங்கள் பெற்றமை

மேலும், இவர் பல பத்ததிகளை ஆராய்ந்து நயமிடத் தந்தமையாலும், அரனைப்(சிவபெருமான்)பற்றியும், ஐந்தொழில்பற்றியும், பரனை(முருகப்பெருமான்)ப்பற்றிய மந்திரம் பலவும், பிரணவ(ஓம்) மந்திரம் பற்றியும் அரிய ஆய்வுரைக் கட்டுரைகளையும் வரைந்தமையாலும், அகில இலங்கை குருமார் அங்கம் வகிக்கும் சமூகசேவா சங்கத்தினால், ” சிவாகம வித்யா பூஷணம் ” எனும் பட்டம் வழங்கப்பெற்று சிறப்புப்புகழ்ச்சியுடன் வாழ்ந்த பெருந்தகையாவார். இதைவிட இவருக்கு “வடமொழி தென்மொழி புலவர்”, “ஈழத்தறிஞர்” மற்றும் “அந்தண குல திலகர்” என்ற பட்டங்களுமுண்டு. வில்லூன்றி கந்தசாமி கோவிலில் பிரதான குருக்களாக இருந்ததுடன் முன்னேஸ்வர வேத சிவாகம வித்யா பீட உப அத்யஷ்சகராகவும் கடமையாற்றினர்.

சிவ தரிசனம்

சிவனின் மீது கொண்ட தூய்மையான பக்தியினால், தன்னுடைய பூஜை அறையில் தினமும் சிவபெருமானைத் துதித்து பலவிதமான ஹோமங்களை மேற்கொண்டார். இவருடைய பக்தியைக் கண்டு மனமிரங்கிய சிவபெருமான், பிரத்தட்சியமாக தரிசனம் அளித்தார். இந்த தரிசனத்தின் மூலம் பிராமணர்க்குள் மிகுந்த தேஜஸ் உடையவராகத் திகழ்ந்தார்.

புகழ் பெற்ற பக்தியுடன் கூடிய வாழ்வு

தான் வாழுங்காலத்தில், தினமும் முருகன் திருமுருகாற்றுப்படையை ஓதித் தடை பல வென்ற மந்திர நாம ஜெபதப வலிமை, சிந்தையிலூறும் செந்தமிழ்ப்பிழம்பு, கண்டிகை குண்டலம், கையினில் ஏடும், வண்டமிழ் வாழ்வும், வீறுடன் வடமொழியை உதிர்க்கும் மாண்பும், அருள் நிறைந்த புன்னகைக்குளிர்முகப் பொலிவும், பளபள வென்று பார்த்தவர் கண்களில் நிலவொளி கான்றிடும் நீறணிமேனியும், பஞ்சாராத்தி பரிவுடன் ஏந்தி,நெஞ்சம் அழுந்தி, நினைவினை ஒடுக்கி, உருகெழு முருகன் உவந்திடப் பூஜைத்திருவினில் மலர்ந்த உடல்நலப் பொலிவுடன் வாழ்ந்தார்.

இவருடைய தினந்தோறும் வேதம் ஓதும் வாயின் நாதத்தழகும், சைவ ஆதீன சற்குருவாக சிம்மாசனத்தில் சிறப்புடன் அமர்ந்து, வித்தைகள் ஆயும் வியத்தகு காட்சியும், உள்ளங்கவரும் உயரிய நட்பும், தமிழின் இனிய தகைசால் பண்பும் கொண்டு விளங்கி, பார்ப்போர் கண்களுக்கு கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

மேலும், பலரைக் குருமார் ஆக்கிய குருமணியாக, பெருமகிழ்வோடு பெயருக்கேற்ப பலதுறைகளிலும் பூரணத்துவம் பெற்று, பூரண ஆனந்தமுடையவராய் வாழ்ந்து எல்லாருடைய மனத்திலும் நீங்காத இடம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

சைவமும் தமிழும் வளர்த்தமை

தமிழ் வளர்ப்பதென்பது கற்பனைக் கதைகளும் வரலாற்று காவியங்களும் மட்டுமின்றி சைவ சித்தாந்தம் மற்றும் புராணங்களின் விரிவுரைகளை அடியார்கட்கு எடுத்துக்கூறுவது என்ற மரபின் தொடர்ச்சியாக சொற்பொழிவுகளையும் உபந்நியாசங்களையும் இடை விடாமல் செய்து வந்தார். நம்முடைய சனாதன தர்மமும் புராணங்களும் கூறுவதை அடியார்களுக்கு எடுத்து விளக்கமாக சொற்பொழிவாற்றி, நாயன்மார்கள் சைவமும் தமிழும் வளர்த்தது போல், சைவமும் தமிழும் வளர்க்க அரும் பாடு பட்டார். தருமபுரி ஆதீனத்துடன் தொடர்புகளை வைத்திருந்து சைவ சித்தாந்ததை விளக்கி பல கட்டுரைகளை அவர்களின் சஞ்சிகையில் எழுதியுள்ளார்.

அதி அற்புத செந்தமிழ் வேதமாகிய கந்த புராணத்தை ஆராய்ந்து நயமுற விரித்துப் பயன் சொல்லும் மாண்பும், சிவநெறி வளரச் சித்தாந்தத்தை ஆராய்ந்தது மட்டுமின்றி, வருவோர்க்கெல்லாம் எடுத்தியம்பி,சைவத்திற்கும் தமிழுக்கும் அரும் பாடுபட்டு, விபுலானந்த அடிகள் மற்றும் மாணிக்கதியாகராஜ பண்டிதர் இவர்களுடன் தாமும் ஒருவராக நின்று, உபந்நியாசம் மற்றும் பல சொற்பொழிவுகளை செய்து, தமிழும் சைவமும் வளர அயராது உழைத்தார். பூர்ணானந்தேஸ்வரக்குருக்களின் சொற்பொழிவுகளைக் கேட்ட விபுலானந்த அடிகள் மிக அருமை அற்புதம் என பலமுறை பாராட்டியுள்ளார்.

மறைவு

“ ஆத்மாவிற்கு என்றும் அழிவில்லை, நித்தியமானது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறியதற்கு இணங்க, பூலோகத்தில் இல்வாழ்க்கை 69 ஆண்டுகள் வாழ்ந்து,1965 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பதினோராம் திகதியன்று தெய்வலோகம் சென்றடைந்தார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் “

என்ற வள்ளுவ வாக்கிற்கமைய , சிவபதம் சென்றடைந்தார். எனவே வானுலகில் தெய்வமாய் வாழும் இப் பெருந்தகையின் பக்தி சேவையை நினைவு கூர்ந்து,நாமும் போற்றிப்பணிந்து, யாவர்க்கும் அப்பெருந்தகையின் நல்லாசி கிடைக்க வேண்டிநிற்போம்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.