7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை பேர்த்தில் சந்தித்தார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனீ வோங்கிற்கும் (Penny Wong) இடையிலான சந்திப்பு இன்று (09) முற்பகல் இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில், இலங்கை ஜனாதிபதியை மரியாதையுடன் வரவேற்ற அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், இந்த மாநாட்டுக்கு இலங்கை வழங்கிய சிறப்பான ஆதரவையும் பாராட்டினார்.
இந்து சமுத்திரம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
இந்து சமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) செயற்பாடுகள் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தை நோக்கி அதிகாரத் தளங்கள் மாறுவதன் மூலம், பிராந்தியத்தில் அவுஸ்திரேலியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது ஒரு முக்கியமான படியாகும் என்று சுட்டிக்காட்டினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்த ஜனாதிபதி, அத்துறையில் ஏற்கனவே பல அவுஸ்திரேலிய நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“கொழும்பு முறைமை” வரையிலான இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து இங்கு நினைவுகூரப்பட்டதுடன், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல புதிய துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடினர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஷ்வர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே மற்றும் ரிஷான் டி சில்வா ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.