நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிய மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர் இணைந்து இந்த தருணத்தில் துருக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய அத்தியாவசிய அடிப்படை வசதிகள் மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது கலந்துரையாடினர்.
துருக்கிய மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உட்பட இராணுவதினரை அனுப்பவும், அரசாங்க மற்றும் தனியார் துறை தயாரிப்புகளை துருக்கிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டது.
பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான குழுவின் ஊடாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
லெபனான் மூலம் சிரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், தலைவர்கள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
N.S