Thursday, January 16, 2025

Latest Posts

ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தில் வெடித்த கலவரம்

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட பிரபல பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் பாரிய தள்ளு முள்ளுகள் ஏற்பாட்டதால் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது.

நடிகர் ரம்பாவின் கணவர் இந்திரனின் நொதன் யூனியன் அறக்கட்டளையின் ஊடாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல நடிகைகளான ஐஸ்வரியா ராஜேஸ், தமன்னா, பிரபல நடிகர் மிர்ச்சி சிவா உட்பட நடிகர்களும், நடிகைகளும் பங்கேற்றனர்.

கட்டணத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்த இலவச பார்வையாளர்கள்
பெரும் அளவிலான பிரபலங்களுக்கு ஏற்ற வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதுடன், மைதானக் கட்டமைப்பும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், பின்னர் சீரற்ற காலநிலை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு நேற்றைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் இசை நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் பின்னர் ஆசனங்களுக்கு ஏற்ற வகையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு ரிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

அதேபோன்று இசை நிகழ்ச்சியில் பங்குபற்றும் பிரபலங்களுடன் விருந்து அருந்தி புகைப்படமெடுக்க 30ஆயிரம் ரூபா அறவிடப்படும் என வெளியான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

25000, 7000 , 3000 ரூபா என்ற அடிப்படையில் ரிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டதுடன், இலவசமாக நின்றவாறும் இசை நிகழ்ச்சியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகள் இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

பிரபலங்களை நோக்கி படையெடுத்த ரசிகர்கள்
பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதியளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதனால் நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த பகுதியை நோக்கி ரசிகர்கள் படையெடுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

கூட்டம் கட்டுக்கடங்காது மேடையை சுற்றி சூழ்ந்ததால் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையை கட்டுப்படுத்த முடியாது போனது. பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளையும் ரசிகர்கள் உடைத்தெறிந்து மைதானம் முழுவதும் சூழ்ந்தனர்.

இதனால் குழுமியிருந்த பிரபலங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் பாதுகாப்பாக அவர்கள் முற்றவெளி மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.

தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்நுழையும் போது கதிரைகள் அங்குமிங்கும் எறியப்பட்டதால் பலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவங்களும் நடந்தன. அத்துடன் பொலிஸார் ரகிசர்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்களையும் நடத்தினர்.

குழப்பகரமான சூழ்நிலைக்கு வழிவகுத்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன், காயமடைந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டாளர்கள் முறையாக ஒழுங்குப்படுத்தவில்லை
ஏற்பாட்டாளர்கள் முறையாக ஒழுங்குப்படுத்தாமை, பொலிஸாரின் பாதுகாப்பு பற்றாக்குறை காரணமாக கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடினர். இதனால் நிலைமை மோசமடைந்து நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் கூட்டம் கட்டுங்கடங்காது சென்றது. கதிரை, தண்ணீர் தாங்கிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாக்கப்பட்டன.

இதேவேளை, முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பிரபலங்கள் வருத்தம்
மிகவும் பிரமாண்டமான முறையில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டமையையிட்டு கவலையடைவதாக இசை நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த தென்னிந்திய பிரபல்யங்கள் தெரிவித்தனர்.

இது மிகவும் துர்திஷ்ட வசமான சம்பவமாகும். இதற்காக வருந்துகிறோம் எனவும் கூறினர்.

ரசிகர்கள் பெரும் மைதானம் முழுவதும் நுழைந்த சந்தர்ப்பத்தில் மேடையில் உரையாற்றிய நடிகர் ரம்பா,

”இசை நிகழ்சியை அமைதியாக கொண்டுசெல்ல ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்ததுடன், நாம் பொலிஸாரை நம்பி வரவில்லை. உங்களை நம்பியே இலங்கைக்கு வந்தோம்.

வருகைதந்தள்ள பிரபலங்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அமைதியாக இருந்தால்தான் அவர்களால் நிகழ்ச்சியை கொண்டுசெல்ல முடியும்.

இங்கு வந்துள்ளவர்களை எவ்வாறு மரியாதையுடன் அனுப்ப வேண்டும் என யாழ்ப்பாணத்தில் சொல்லிக்கொடுக்க வேண்டும்.” என்றார்.

”பாடகர் ஹரிஹரன் வந்திருக்கிறார். அவரை பற்றி நாம் அறிவோம். அவரை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருங்கள்.” என நடிகர் மிர்ச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

என்றாலும், ரசிகர்களின் கூச்சலும், தள்ளு, முள்ளுகளும் தொடர்ந்து அதிகரித்தால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.