எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.பல சந்தர்ப்பங்களில் இந் நாட்டிற்கு வெற்றியையும் புகழையும் பெற்றுத் தந்தது இளைய தலைமுறையினர்தான் என்றும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர் இந்த இந்நாட்டை வெற்றிப் பெறச்செய்தனர் என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எந்தவொரு நாட்டினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அந்நாட்டின் இளைஞர்கள் இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அந்த இளைஞர்களை சரியாக கையாள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் சனத்தொகையில் இளைஞர்கள் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதேவேளை விளையாட்டின் மூலம் உலகையே வென்ற பல மாவீரர்கள் நம்மிடம் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று கிக் பாக்சிங் மூலம் இலங்கைக்கு புகழைக் கொண்டு வந்த இந்துகாதேவி கணேஸன் புதல்வி வவுனியாவில் பிறந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்துகாதேவி இந்த தாய்நாட்டிற்கு மேலும் பல தங்கப்பதக்கங்களை கொண்டு வருவாள் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் கிக் குத்துச்சண்டை போட்டித் தொடரில் 25 கிலோவுக்கு கீழ் 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெறுமையைத் தேடித்தந்த இந்துகாதேவி கணேஸ் வீராங்கனை இன்று(08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவை சந்தித்தார்.
முல்லைத்தீவின் புதிய நகரில் பிறந்து உறுதி,அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பயணத்தின் விளைவாக பாராட்டத்தகு பெறுபேற்றினை பிறந்த தாய்நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தமைக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர்,அவருக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசிளையும் இதன்போது வழங்கி வைத்தார்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவருக்கு தேவையான முழு ஆதரவையும் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது உறுதியளித்தார்.ஐக்கிய மகளிர் சக்தியினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு,அதன் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.