Saturday, July 27, 2024

Latest Posts

இலங்கை, மொரிஷியஸில் யுபிஐ சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், காணொலி காட்சி இவ்விரு நாடுகளிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், இலங்கை மற்றும் மொரிஷியஸில் யுபிஐ சேவைகளையும், மொரீஷியஸில் ரூபே கார்டு சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய பெருங்கடலில் உள்ள மூன்று நாடுகளுக்கும் (இந்தியா, இலங்கை, மொரிஷியஸ்) இந்த நாள் ஒரு சிறப்பான நாள். நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க உறவு நவீன டிஜிட்டல் முறையில் இன்று இணைந்துள்ளது. நமது மக்களின் வளர்ச்சிக்கான நமது உறுதிப்பாட்டின் நிரூபணம் இது.எல்லை தாண்டிய வர்த்தகத்தை மட்டுமல்ல, எல்லை தாண்டிய உறவையும் இது வலுப்படுத்தி உள்ளது. நண்பர்களை இந்தியாவுடன் இணைக்கும் புதிய பொறுப்பை யுபிஐ ஏற்றுள்ளது.

இந்த மைல்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவின் ரூபே அட்டை, மொரிஷியசுக்குள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் மொரிஷியஸும் பல நூற்றாண்டு கால வலிமையான கலாச்சார, வர்த்தக உறவுகளைக் கொண்டது. நமது உறவின் புதிய பரிமாணத்தை இது கொடுத்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இலங்கை மற்றும் மொரிஷியஸுக்கு பயணிக்கும் இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கு பயணிக்கும் மொரிஷியஸ் நாட்டினருக்கும் யுபிஐ செட்டில்மென்ட் சேவைகள் கிடைக்க இந்த நடவடிக்கை உதவும். மொரீஷியஸில் ரூபே அட்டை சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், மொரிஷியஸில் ரூபே முறையின் அடிப்படையில் மொரிஷியஸ் வங்கிகள் அட்டைகளை வழங்கவும், இந்தியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் நிலவும் பணப்பரிவர்த்தனைத் தீர்வுகளுக்கு ரூபே அட்டையைப் பயன்படுத்தவும் உதவும்.கடந்த வாரம், பிரான்ஸ் நாட்டின் சுற்றுலத்தலமான ஈஃபிள்டவரில் யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபையில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும். இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா மையங்களில், இந்திய பயணிகளுக்கு பயன்படும் வகையில் யுபிஐபரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு 2016-ம் ஆண்டு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனை பிரதானமாக மாறியுள்ளது. பணப் பரிவர்த்தனை தொழில்நுட்பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.